ராஜீவ் பற்றி மோடியின் விமரிசனம்: தில்லி பல்கலை பேராசிரியர்கள் 200 பேர் கண்டனம்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பற்றி கடுமையான விமரிசனம் செய்த பிரதமர் மோடிக்கு தில்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் ஒருமித்த குரலில் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.
புது தில்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பற்றி கடுமையான விமரிசனம் செய்த பிரதமர் மோடிக்கு தில்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் ஒருமித்த குரலில் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட மோடி, முன்னாள் பிரதமரும், ராகுல் காந்தியின் தந்தையுமான ராஜீவ் காந்தியை கடுமையாக விமரிசித்தார்.
அப்போது, "உங்கள் தந்தையை (ராஜீவ் காந்தி) அவரால் அமைக்கப்பட்ட நீதிமன்றம் வேண்டுமானால் குற்றமற்றவர் என்று கூறலாம். ஆனால், உண்மையில் அவர், "ஊழலில் முதலிடம் பெற்றவர்' என்ற பெயருடன்தான் மரணமடைந்தார்' என்று பிரதமர் பேசியிருந்தார்.
இதற்குக் கண்டனம் தெரிவித்திருக்கும் தில்லி பேராசிரியர்கள், இந்த நாட்டுக்காக தன்னுயிரை தியாகம் செய்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைப் பற்றி உண்மையில்லாத கருத்துக்களை அளித்து பிரதமர் அலுவலகத்துக்கே உண்டான தார்மீகக் கடமையை மீறி மரியாதைக் குறைவாக பிரதமர் மோடி பேசியுள்ளார் என்று எழுதி அதில் 207 பேராசிரியர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த கண்டனக் கடிதம் சமூக வலைத்தளங்களிலும் வேகமாகப் பரப்பப்பட்டு வருகிறது.
மேலும் அந்த கடிதத்தில் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது எடுக்கப்பட்ட முக்கியக் கொள்கை முடிவுகள் பற்றியும், அதனால் நாடு அடைந்த முன்னேற்றம் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது.