இந்தியா

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி: ரூ.10 கோடி பிணைத்தொகை செலுத்தவும் உத்தரவு

DIN


அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள கார்த்தி சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
வெளிநாடு செல்வதற்காக ரூ.10 கோடி பிணைத்தொகை செலுத்த வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏர்செல்-மேக்சிஸ், ஐஎன்எக்ஸ் மீடியா ஆகிய வழக்குகள் தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்நிலையில், ஸ்பெயின், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். 
இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்ள சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆட்சேபம் எதுவும் தெரிவிக்கவில்லை. இதைத் தொடர்ந்து, அவர் வெளிநாடு பயணம் மேற்கொள்ள அனுமதி அளித்த நீதிபதிகள், உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தெரிவித்துள்ள நிபந்தனைகளின்படி, ரூ.10 கோடியைப் பிணைத்தொகையாகச் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
இதையடுத்து, கார்த்தி சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கே.வி.விஸ்வநாதன், ஏற்கெனவே செலுத்திய ரூ.10 கோடி பிணைத்தொகை உச்சநீதிமன்றத்தின்வசமே உள்ளது என்றார்.
 இதைத் தொடர்ந்து நீதிபதிகள், மீண்டும் ஒருமுறை ரூ.10 கோடி பிணைத்தொகையைச் செலுத்துவதில், உங்களுக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது என நினைக்கிறோம் என்றனர்.
வெளிநாடு செல்ல அனுமதி கோரி கடந்த ஜனவரி மாதம் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தபோது, அமலாக்கத் துறையின் விசாரணைக்குத் தகுந்த முறையில் ஒத்துழைப்பு நல்க வேண்டும். இல்லையேல், கடுமையான நடவடிக்கைகளை மனுதாரர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வெளிநாடு செல்வதற்கு முன், நீதிமன்றத்தின் பொதுச் செயலாளரிடம் பிணைத் தொகையாக ரூ.10 கோடியைச் செலுத்த வேண்டும். வெளிநாட்டிலிருந்து திரும்பிய பிறகு அந்தத் தொகையை மனுதாரர் பெற்றுக் கொள்ளலாம். மேலும், அமலாக்கத் துறையினர் முன் ஆஜராகி, விசாரணைக்கு ஒத்துழைப்பேன் என உறுதியளிக்கும் கடிதத்தையும் மனுதாரர் வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
அப்போது நடைபெற்ற விசாரணையின்போது, கார்த்தி சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் அளித்த சுதந்திரத்தை அவர் தவறாகப் பயன்படுத்துகிறார். விசாரணைக்குக் குறுக்கீடு விளைவிக்கும் நோக்கில், அவர் அடிக்கடி வெளிநாடு செல்ல அனுமதி கோருகிறார். 
கடந்த 6 மாதங்களில், 51 நாள்கள் அவர் வெளிநாடுகளில் இருந்துள்ளார் என்று அமலாக்கத் துறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

SCROLL FOR NEXT