இந்தியா

பிரதமரை மணிசங்கர் அய்யர் விமர்சித்தபோது அமைதிகாத்தார் ராகுல்

DIN


காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர், பிரதமர் நரேந்திர மோடியை தரக்குறைவாக விமர்சித்தபோது, அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார் என பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா குற்றஞ்சாட்டியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது:
நாட்டின் பிரதமர் மீது ஒருவர் தரக்குறைவாக விமர்சிக்கும்போது யாராவது அமைதியாக இருப்பார்களா? காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர், பிரதமர் நரேந்திர மோடியை தரக்குறைவாக விமர்சனம் செய்தபோது, அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எதுவும் பேசாமல் அமைதிகாத்தார்.
பாலாகோட்டில் பயங்கரவாதிகளின் முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டபோது, நாடே இனிப்பு வழங்கி கொண்டாடியது. ஆனால், ராகுல் காந்தியின் அலுவலகமும், சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவின் அலுவலகமும் சோகத்தில் மூழ்கின. அவர்களின் முகத்தில் மகிழ்ச்சி மறைந்தது.
கனவு பலிக்காது: வன்முறையைத் தூண்டும் வகையில் பேசி தற்போது வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ள ஜாகிர் நாயக், காங்கிரúஸா அல்லது சமாஜவாதி-பகுஜன் சமாஜ் கட்சிகளின் மகா கூட்டணியோ ஆட்சிக்கு வந்தால் எளிதில் தப்பிவிடலாம் என்று கனவுகண்டு வருகிறார். அக்கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் தான் நாட்டுக்குத் திரும்புவேன் என அவர் தெரிவித்து வருகிறார். ஆனால், அவரது கனவு பலிக்காது. பாஜகவே மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. பாஜக ஆட்சியில் இந்தியா திரும்பினால், அவர் சிறையில் அடைக்கப்படுவது நிச்சயம்.
உணர்வுப்பூர்வ கோஷம்: பாஜக தலைமையிலான மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தால் 26 லட்சம் மக்கள் பயனடைந்துள்ளனர். நாட்டிலுள்ள 50 கோடி மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த பாஜக அரசு முயற்சி மேற்கொண்டது. இதன் காரணமாக, மக்களிடையே பாஜகவுக்கான ஆதரவு அதிகரித்துவருகிறது. பல மாநிலங்களுக்கு நான் பயணித்துவிட்டேன். நான் எங்கு சென்றாலும் மோடி-மோடி என்ற கோஷங்களே என் காதில் ஒலிக்கின்றன. இது தேர்தல் காரணமாக மட்டும் இல்லை; மக்களின் இதயத்திலிருந்து உணர்வுப்பூர்வமாக இந்த கோஷங்கள் எழுகின்றன.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில், இந்திய ராணுவ வீரர்களை பாகிஸ்தான் கொன்றுகுவித்தபோது, அது குறித்து சமாஜவாதியோ, பகுஜன் சமாஜ் கட்சியோ கண்டனம் தெரிவிக்கவில்லை. அவர்கள் அப்போதெல்லாம் அமைதியாகவே இருந்தனர். நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதை பாஜக ஒருபோதும் அனுமதிக்காது என்று அமித் ஷா பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT