இந்தியா

தேர்தல் தோல்வி எதிரொலி: கேரளத்தில் 3ஆம் ஆண்டு கொண்டாட்டத்தை தவிர்த்த இடதுசாரி கூட்டணி அரசு

DIN

மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியின் எதிரொலியாக, கேரளத்தில் ஆட்சியமைத்ததன் 3ஆம் ஆண்டு நிறைவு தின கொண்டாட்டத்தை அந்த மாநிலத்தை ஆளும் இடதுசாரி கூட்டணி அரசு தவிர்த்துவிட்டது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் பெரும் பின்னடைவைச் சந்தித்தன. குறிப்பாக, கேரளத்தில் ஆளும் இடதுசாரி கூட்டணி வெறும் 1 தொகுதியில் மட்டுமே வென்றது. மாநிலத்தில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளில் 19இல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இது இடதுசாரி கூட்டணியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கேரளத்தில் இடதுசாரி கூட்டணி ஆட்சியமைத்து சனிக்கிழமையுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதையொட்டி, கேரளத்தின் பல இடங்களில் பொது கூட்டங்களுக்கும், கலாசார நிகழ்ச்சிகளுக்கும், கண்காட்சிகளுக்கும் இடதுசாரி கூட்டணி அரசு ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிகழ்ச்சியின்போது புதிய திட்டங்களை அறிவிக்கவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வியால், அந்த கொண்டாட்டத்தை கைவிட்டு விட்டது. புதிய திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளையும் இடதுசாரி கூட்டணி அரசு வெளியிடவில்லை.
இருப்பினும் முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையில், "தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை எனது அரசு நிறைவேற்றி விட்டது. கடந்த 3 ஆண்டுகளில் சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட பல துறைகளில் மாநில அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் இடதுசாரி கட்சிகள் ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம், கேரளம்தான். இதனால், மக்களவைத் தேர்தலில் அந்த மாநிலத்தில் இடதுசாரி கட்சிகள் கணிசமான எண்ணிக்கையில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்புக்கு மாறாக, இடதுசாரி கட்சிகள் படுதோல்வியடைந்துள்ளன. 
இந்தத் தோல்விக்கு, சபரிமலை விவகாரத்தை கையாண்ட விதம், வெள்ளப் பாதிப்புக்கு பிறகு மேற்கொண்ட சீரமைப்பு பணிகளில் ஏற்பட்ட அதிருப்தி உள்ளிட்டவையே காரணம் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னியாகுமரி மாவட்ட அஞ்சலகங்களில் சிறப்பு ஆதாா் சேவை

விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: விசாரணை மே 6-க்கு ஒத்திவைப்பு

சிறப்பு திட்ட முறைகளை பயன்படுத்தி கோடை பயிா்களை பாதுகாக்க அறிவுறுத்தல்

டிடிஇஏ பள்ளிகளில் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT