இந்தியா

எதற்கும் தயாராக இருக்கிறோம்: ஐஎஸ் ஊடுருவல் குறித்து கேரள டிஜிபி பேட்டி

DIN

இலங்கையில் இருந்து 15 ஐஎஸ் பயங்கரவாதிகள் கேரள கடற்கரை வழியாக இந்தியாவின் லட்சத்தீவுக்குள் ஊடுருவியுள்ளதாக இந்திய உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையையடுத்து, இந்திய கடலோரப் பகுதிகளில் கடற்படை, கடலோர காவல்படை, கடற்படை போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

கேரளத்தில் வசித்து வரும் சிலர் ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், உளவுத்துறை எச்சரித்துள்ளது. 

கடந்த மே 23ஆம் தேதி இலங்கையின் உளவுப்பிரிவினர் அளித்த தகவலின்படி, கடலோர பகுதிகள் உஷார்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இலங்கையில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலுக்குப் பிறகு இங்கு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக, மீன்பிடி படகுகளின் உரிமையாளர்களுக்கும், மீனவர்களுக்கும் தகவல் அளித்து, கடலில் மீனவர்களை தவிர சந்தேகிக்கும் வகையில் நபர்கள் தென்பட்டால் தகவல் அளிக்குமாறு தெரிவித்துள்ளோம் என்று கடலோர காவல்துறையினர் தெரிவித்தனர். 

இலங்கை சம்பவத்துக்குப் பிறகு, கேரளத்தில் ஐஎஸ் பயங்கரவாதிகளின் நடமாட்டம் உள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சார்பில் ஏற்கெனவே விசாரணை நடத்தி சென்றுள்ளனர்.  ஐஎஸ் பயங்கரவாதிகள் கேரளத்திலும் தாக்குதல் நடத்தக்கூடும் என்று என்ஐஏ எச்சரிக்கை விடுத்துள்ளதால் கண்காணிப்பு தீவிரமாகியுள்ளது.

இந்நிலையில், கேரள டிஜிபி லோக்நாத் பெஹெரா செவ்வாய்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

மெத்தனமாக இருப்பதைக் காட்டிலும் எச்சரிக்கையுடன் இருப்பது மிக நன்று. ஐஎஸ் ஊடுருவல் தொடர்பாக ரகசிய தகவல் கிடைத்ததில் இருந்து கேரள கடலோரப் பகுதிகள் அனைத்தும் தீவிரக் கண்காணிப்புடன் முழுப் பாதுகாப்பாக உள்ளது. எனவே மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். உளவுத்துறை, கடலோரக் காவல்படை, கேரள போலீஸார் ஆகிய அனைத்து பிரிவுகளும் உச்சகட்ட உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. எதற்கும் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT