இந்தியா

மோடி, இம்ரான் சந்திப்பு குறித்து முடிவு எடுக்கப்படவில்லை: மத்திய அரசு வட்டாரங்கள்

DIN


பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் கிர்கிஸ்தானில் அடுத்த மாதம் சந்தித்துப் பேசுவது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு, கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் அடுத்த மாதம் 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். இதேபோல், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் பங்கேற்கவிருக்கிறார். இந்த மாநாட்டையொட்டி, இரு தலைவர்களும் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், மத்திய அரசு வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்தாத வரை, அந்நாட்டுடன் பேச்சுவார்த்தைகள் கிடையாது என்பதுதான் இந்தியாவின் முடிவாகும். கடந்த 2016-இல் பதான்கோட் விமானப் படை தளத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுடன் எந்த பேச்சுவார்த்தையிலும் இந்தியா ஈடுபடவில்லை. பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்க முடியாது என்பதை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டையொட்டி, பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் சந்தித்துப் பேசுவது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த 2014-இல் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற போது, சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, பாகிஸ்தானின் அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப் பங்கேற்றார். இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே உறவு மேம்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பதான்கோட் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு அந்த நம்பிக்கை தகர்ந்துவிட்டது.
இப்போது மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிம்ஸ்டெக் நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில், வங்கதேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, நேபாளம், பூடான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

அமெரிக்கா: இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்தக்கோரி போராட்டம்

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

SCROLL FOR NEXT