இந்தியா

சபரிமலை விவகாரம்: தரிசனத்துக்கு 36 பெண்கள் முன்பதிவு.. என்ன செய்யப்போகிறது கேரள அரசு?

DIN


சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் தரிசனம் மேற்கொள்ளலாம் எனும் தற்போதைய நிலையே நீடிக்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்ததையடுத்து, இவ்விவகாரத்தில் கேரள அரசு என்ன செய்யப்போகிறது எனும் கேள்வி எழுந்துள்ளது. 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தொடர்ந்து 2 மாதம் நடைபெறவுள்ள மகர ஜோதி மண்டல பூஜை வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. இந்த சூழலில் சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், இதை உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி இன்று உத்தரவிட்டது. அதேசமயம், சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் தரிசனம் மேற்கொள்ளலாம் எனும் தற்போதைய நிலையே நீடிக்கும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இதனிடையே, சபரிமலை ஐயப்பனை தரிசிக்க ஆன்லைன் மூலம் 36 பெண்கள் முன்பதிவு செய்துள்ளனர். எனவே, இவர்கள் தரிசனம் மேற்கொள்ள கேரள அரசு பாதுகாப்பு அளிக்குமா, பக்தர்கள் அனுமதிப்பார்களா போன்ற கேள்விகள் எழுந்தது.

இந்நிலையில், சபரிமலை விவகாரம் குறித்து தேவஸ்வம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்தரன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கையில், 

"தீர்ப்பு குறித்து விரிவாக வாசிக்க வேண்டியதுள்ளது. கடந்தாண்டைப்போல், இவ்விவகாரத்தை அரசியல் லாபத்துக்குப் பயன்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாம் என எதிர்க்கட்சிகளைக் கேட்டுக்கொள்கிறேன்" என்றார். கோயிலுக்குள் இளம்பெண்கள் அனுமதிக்கப்படுவார்களா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "இதற்குப் பதிலளிக்க இது சரியான நேரம் கிடையாது" என்றார்.

சபரிமலை தலைமை தந்திரி கண்டரரு ராஜீவரு உச்சநீதிமன்றத்தின் முடிவு குறித்து தெரிவிக்கையில், 

"7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது எங்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது. இது பக்தர்களின் நம்பிக்கைக்கு வலு சேர்க்கிறது" என்றார்.

பாஜக மூத்த தலைவர் கும்மனம் ராஜசேகரன் இதுகுறித்து பேசுகையில், 

"கேரள அரசு இளம் பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது. பெண்கள் கோயிலுக்குள் செல்ல போலீஸார் உதவி செய்தால், அது பக்தர்களின் நம்பிக்கையை பாதிக்கும். அதனால், கடும் விளைவுகள் ஏற்படக்கூடும். இதனால், 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளிக்கும் வரை அரசு காத்திருக்க வேண்டும். ஒருவேளை, தடை செய்யப்பட்ட வயதுப் பெண்கள் தரிசனம் செய்ய முயற்சித்தால், அரசு அவர்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்" என்றார்.

காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா தெரிவிக்கையில், "மாநில அரசு இளம் பெண்களுக்கு பாதுகாப்பளித்து, சபரிமலையில் தரிசனம் மேற்கொள்ள உதவி செய்து எந்தப் பிரச்னையையும் கிளப்பக் கூடாது" என்றார்.

முன்னாள் முதல்வர் உமன் சாண்டி தெரிவிக்கையில், "உச்சநீதிமன்றத்தின் முடிவு பக்தர்களின் நம்பிக்கையைப் பாதுகாக்க உதவும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT