இந்தியா

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது: கதிர் ஆனந்த் உட்பட 4 எம்.பி.க்கள் பதவியேற்பு!

DIN

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. வேலூர் மக்களவைத் தொகுதி எம்.பி. கதிர் ஆனந்த் தமிழில் பதவியேற்றுக் கொண்டார்.

இவர் உட்பட 4 பேர் இன்று மக்களவை உறுப்பினர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

முன்னதாக, மறைந்த நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள் அருண் ஜெட்லி, ராம்ஜெத்மலானி, குருதாஸ் தாஸ் குப்தா உட்பட மக்களவையில் 10 பேருக்கும், மாநிலங்களவையில் 5 பேருக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இன்று தொடங்கியிருக்கும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர், வரும் டிசம்பர் 13-ஆம் தேதி வரை 20 அமர்வுகளாக நடைபெறவுள்ளது. இது, தற்போது புதிதாக அமைந்துள்ள 17-ஆவது மக்களவையின் 2-ஆவது கூட்டத்தொடராகும். 

வேலை வாய்ப்பின்மை, பொருளாதாரச் சரிவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக மத்திய அரசை விமர்சித்து வரும் எதிர்க்கட்சிகள், அந்த விவகாரங்களை நாடாளுமன்றத்தில் தீவிரமாக எழுப்பத் திட்டமிட்டுள்ளன. 

இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்கு வழிகோலும் வகையில் தில்லியில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் கலந்துகொண்டனர். 

வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மக்களவையில் எம்பி.,யாக பதவியேற்றுக் கொண்டார். இவர் தவிர பிகார் மாநிலம் சமஸ்திபூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பிரின்ஸ் ராஜ், மத்தியப் பிரதேச மாநிலம் ஷாடோல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஹிமாத்ரி சிங் மற்றும் மகாராஷ்ரிட மாநிலம் சதாரா மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஸ்ரீனிவாஸ் தாதாசாகேப் பாட்டீல் ஆகியோரும் பதவியேற்றுக் கொண்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினராக கதிர் ஆனந்த் பதவியேற்றதன் மூலம், மக்களவையில் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

திரைக்கதிர்

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

SCROLL FOR NEXT