இந்தியா

டி.கே.சிவகுமாரின் நீதிமன்றக் காவல் அக்., 15 வரை நீட்டிப்பு: விசாரணை நடத்தவும் நீதிமன்றம் அனுமதி

DIN


கருப்புப் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவகுமாரின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 15-ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹவாலா முறையில் கோடிக்கணக்கில் பணப் பரிமாற்றம் செய்ததாகவும், வரி ஏய்ப்பு செய்ததாகவும், சிவகுமாருக்கு எதிராக வருமான வரித் துறை கடந்த ஆண்டு வழக்குப்பதிவு செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. 

அதனடிப்படையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிவகுமார் மீது வழக்குப்பதிவு செய்த அமலாக்கத் துறையினர், அவரிடம் 3 முறை விசாரணை நடத்தினர். இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக தில்லியில் உள்ள கர்நாடக அரசு இல்ல ஊழியர் உள்ளிட்டோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதையடுத்து, கடந்த 3-ஆம் தேதி சிவகுமார் கைது செய்யப்பட்டார். 

அமலாக்கத் துறை காவல் முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை அக்டோபர் 1-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைவதையடுத்து, அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சிவகுமாரின் நீதிமன்றக் காவலை மேலும் 14 நாள்களுக்கு நீட்டிக்குமாறு அமலாக்கத் துறையினர் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, சிவகுமாரின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 15-ஆம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிபதி அஜய் குமார் குஹார் உத்தரவிட்டார். 

மேலும், உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சிவகுமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், அவரிடம் சரியாக விசாரணை நடத்த முடியவில்லை என அமலாக்கத் துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனடிப்படையில், அக்டோபர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் திகார் சிறையில் சிவகுமாரிடம் விசாரணை நடத்தவும் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. 

முன்னதாக, சிவகுமாருக்கு ஜாமீன் வழங்க தில்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த 25-ஆம் தேதி மறுப்பு தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

SCROLL FOR NEXT