மத்தியப் பிரதேசத்தில் மிக முக்கிய அரசுப் பணிகளில் தங்களுக்கு சாதகமாக வேலைகளை நடத்திக் கொள்ள அப்பாவிப் பெண்களை இரையாக்கிய ஹனி-டிராப் முறைகேட்டில் மேலும் பல திடுக்கிடும் விஷயங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
ஹனி-டிராப் முறைகேட்டு விவகாரத்தை கையிலெடுத்திருக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழுவினரிடம், மிக முக்கிய குற்றவாளிப் பெண்ணின் டைரி சிக்கியுள்ளது. அந்த டைரியில், குற்றவாளிகள் பயன்படுத்தும் கோட் வார்த்தைகள் குறித்து செய்திகள் கசிந்துள்ளன.
மத்தியப் பிரதேசத்தில் அரசு உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என பல்வேறுப்பட்ட முக்கிய நபர்கள் தொடர்புடைய பாலியல் முறைகேடு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இந்த நிலையில், முக்கியக் குற்றவாளியின் டைரியில், மேரா பியார், பஞ்ச்சி, விஐபி போன்ற வார்த்தைகள் கோட் வார்த்தைகளாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்துளள்து.
போபாலின் ரேவாரா நகரில் கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து ஏராளமான விடியோ காட்சிகள், புகைப்படங்களும் இந்த டைரியுடன் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: 4000 இளம்பெண்கள்.. 8 முன்னாள் அமைச்சர்கள்.. முன்னாள் முதல்வர் வரை நீளும் மகா 'ஹனி ட்ராப்' செக்ஸ் ஊழல்!
அந்த டைரியில் யார் யாரிடம் இருந்து எவ்வளவு பணம் பெறப்பட்டது, பாக்கி, உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகளின் பெயர்கள், அரசியல்வாதிகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் மத்தியப் பிரதேசத்தின் முக்கியப் பதவிகளை வகித்த முன்னாள் அரசியல்வாதிகளின் பெயர்கள் அந்த டைரியில் இடம்பிடித்திருந்ததாக ஐஏஎன்எஸ் செய்தி தெரிவிக்கிறது. அந்த டைரியில் இடம்பெற்றிருந்த நபர்கள் எல்லாம் தற்போது தில்லியில் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கிறார்கள். மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களின் பெயர்களும் டைரியில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விஷயமாம்.
டைரியின் பல பக்கங்கள், முந்தைய கல்வெட்டு மொழி போல அவ்வளவு எளிதில் படிக்க இயலாததாக உள்ளது. பக்கத்துக்கு பக்கம் கோட் வார்த்தைகள், ஒரு பக்கத்தில் இதயம் - அம்புக்குறி படம் வரையப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு பக்கத்துக்கும் ஒவ்வொரு கோட் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பஞ்ச்ச் என்ற கோட் வார்த்தை, மிகப்பெரிதாக ஒன்று சிக்கியிருக்கிறது என்பதை குறிக்கலாம் என்று ஐஏஎன்என்ஸ் செய்தி தெரிவிக்கிறது.
மேலும், மேரா பியார் என்ற வார்த்தை பெரும்பாலும் வசமாகச் சிக்கிக் கொண்ட இளம்பெண்களைப் பற்றி பதிவு செய்யும் பக்கங்களிலும், விஐபி என்ற வார்த்தை, மிக உயரிய பொறுப்பில் இருக்கும் அரசியல்வாதிகளின் விவரங்கள் இருக்கும் பக்கத்திலும் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.
தொண்டு நிறுவனம் என்ற பெயரில் இளம் பெண்களுக்கு உதவி செய்து, அவர்களை வைத்து மிகப்பெரிய பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதுதான் ஹனி-டிராப். பணியிட மாறுதல், ஒப்பந்தம் பெறுதல், முக்கிய உரிமம் அல்லது ஒப்பந்தம் பெறுதல் போன்றவற்றுக்கு தனி நபர்கள், அரசியல்வாதிகள் அல்லது அரசு அதிகாரிகளுக்கு லஞ்சமாக இதுபோன்ற பெண்களை அனுப்பி வைக்க இந்த தொண்டு நிறுவனத்தின் உரிமையாளர்கள் தரகர்கள் போல செயல்பட்டு லாபம் பார்த்துள்ளனர்.
இதில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒன்றுமறியாத பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதுதான் பரிதாபம். படிக்கவோ, குடும்ப வறுமைக்காகவோ உதவி செய்வதாகக் கூறி தங்களது வலையில் வீழ்த்திய இந்த கும்பல், அவர்களை மூளைச் சலவை செய்தோ அல்லது மிரட்டியோ தங்களது 'வேலை'க்கு அடிபணிய வைத்து விடுகிறார்கள். ஒரே ஒரு முறை அவர்களுக்கு 'வேலை' செய்துவிட்டால், அதை விடியோ எடுத்து வைத்துக் கொண்டு அதிகாரிகளையும், மறுபக்கம் தொடர்ந்து இதே 'வேலை'யில் ஈடுபடுமாறு பெண்களையும் மிரட்டி தங்களுக்குத்தேவையான விஷயங்களை சாதித்துக் கொண்டிருக்கிறது இந்த கும்பல்.
மத்தியப் பிரதேசத்தில் விஸ்வரூபம் எடுத்திருக்கும் இந்த முறைகேட்டில் ஸ்வேதா ஜெயின் என்ற முக்கியக் குற்றவாளியுடன் 5 பேர் கைதுசெய்யப்பட்டு, சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர் இதனை விசாரித்து வருகிறார்கள்.
செக்ஸ் ராக்கெட்டில் ஈடுபடுத்த விரும்பிய இளம்பெண்களை முதலில் ஸ்வேதாவும் அவருடைய உதவியாளரான ஆர்த்தி தயாள் எனும் பெண்ணும் இணைந்து சென்று தேர்ந்தெடுப்பார்கள். அதற்கு முன்பு அந்தப் பெண்களின் குடும்பச் சூழல், அவர்கள் தங்களது நிபந்தனைக்கு உட்படுவார்களா? என்பதையெல்லாம் ஸ்வேதாவும், ஆர்த்தியும் கணித்து விடுவார்கள். பிறகு தாங்கள் நடத்தும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் மூலமாக சம்மந்தப்பட்ட பெண்களின் உயர் கல்வி மற்றும் வருமானம் தரும் தொழில்வாய்ப்புகளுக்கு உதவி பெற்றுத்தருவதாக உறுதிமொழி அளித்து அவர்களை மூளைச்சலவை செய்து தங்களது பொறியில் விழச் செய்வார்கள். அந்த இளம்பெண்களும் தங்களது லட்சியங்களை அடைய இவர்கள் உதவுவார்கள் என்றெண்ணி இவர்களது வலையில் தாங்களாக விரும்பி வந்து மாட்டிக் கொள்வார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.