முகப்பு
இந்தியா

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் 

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்கி தில்லி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:00 AM
பகிர்:

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்கி தில்லி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியிலிருந்தபோது, மத்திய நிதியமைச்சராக ப. சிதம்பரம் பதவி வகித்தார். அப்போது ரூ.3,500 கோடி மதிப்பிலான ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்துக்கு வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரிய ஒப்புதலை ப. சிதம்பரம் கடந்த 2006ஆம் ஆண்டில் அளித்தார். மிகப்பெரிய மதிப்பு கொண்ட ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் பொருளாதார விவகாரங்களுக்கான கேபினெட் குழுவுக்கு மட்டுமே உள்ள நிலையில், ப. சிதம்பரம் எப்படி வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரிய ஒப்புதலை அளித்தார்? என்று கேள்வியெழுந்தது.  இதுகுறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. 

இதேபோல், அமலாக்கத் துறையும் தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை அமைப்புகள் பதிவு செய்துள்ள ஊழல் வழக்குகளில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் முன்ஜாமீன் கோரி தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த முறை இவ்வழகு தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது ப. சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் முன்ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பு வரும் 5ஆம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிவித்திருந்தார். இதன்படி இவ்வழக்கில் நீதிபதி ஓ.பி. சைனி இன்று தீர்ப்பளித்தார். 

அதில், ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் இந்தியாவை விட்டு செல்லக் கூடாது என்ற நிபந்தனையுடன் முன்ஜாமீன் தரப்பட்டுள்ளது. மேலும் இருவரும் தலா ரூ 1 லட்சம் பிணைத்தொகை வழங்கவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.