இந்தியா

ஜம்மு-காஷ்மீர்: புதிய வழக்கின் கீழ் ஃபரூக் அப்துல்லா கைது

DIN

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா மீது பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த மாதம் 5-ஆம் தேதி நீக்கப்பட்டதிலிருந்து, ஃபரூக் அப்துல்லா வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் மீது பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை புதிய வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதன் மூலம் 6 மாதங்கள் வரை விசாரணையின்றி அவரைக் காவலில் வைக்க முடியும். இது தொடர்பாக அதிகாரிகள் சிலர் கூறுகையில், ""ஜம்மு-காஷ்மீரின் குப்கர் சாலையில் உள்ள இல்லத்தில், ஃபரூக் அப்துல்லா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் மேலும் 6 மாதங்களுக்கு அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட வாய்ப்புள்ளது'' என்றனர்.
இது தொடர்பாக, தேசிய மாநாட்டுக் கட்சியின் மூத்த தலைவர் முகமது அக்பர் லோன் கூறுகையில், ""இந்த விவகாரத்தை சட்டரீதியாக அணுக முடிவெடுத்துள்ளோம். ஃபரூக் அப்துல்லா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது தொடர்பாக நீதிமன்றத்தில் முறையிட உள்ளோம்'' என்றார்.
ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஒருவர் மீது பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுவது, இதுவே முதல் முறையாகும். கடந்த 1978-ஆம் ஆண்டு, ஃபரூக் அப்துல்லாவின் தந்தையான ஷேக் அப்துல்லா ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வராக இருந்தபோது, பொதுப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது. 
காங்கிரஸ் கண்டனம்: இது தொடர்பாக, காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான குலாம் நபி ஆசாத் கூறுகையில், ""ஃபரூக் அப்துல்லா மீது பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதைக் கடுமையாகக் கண்டிக்கிறேன். ஜம்மு-காஷ்மீரின் ஒருமைப்பாட்டுக்காக உழைத்த அரசியல் தலைவர்கள் அனைவரும் காவலில் வைக்கப்பட்டுள்ளது துரதிருஷ்டவசமானது. ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகள் குறைந்திருப்பதற்கு, அத்தலைவர்களின் நடவடிக்கைகளே காரணமன்றி, பாஜகவின் நடவடிக்கைகள் காரணமல்ல'' என்றார். 
ஃபரூக் அப்துல்லாவின் மகன் ஒமர் அப்துல்லா, முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT