இந்தியா

அயோத்தி வழக்கு: விரும்பினால் சமரசத்தை நாடலாம்

DIN


அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்துக்கு உரிமை கோரும் தரப்பினர் விரும்பினால் மீண்டும் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அக்டோபர் 18-ஆம் தேதிக்குள் இறுதி வாதத்தை முடித்துக் கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் பாபர் மசூதி இருந்த சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்துக்கு சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா ஆகிய மூன்று அமைப்பினரும் உரிமை கோரி வந்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த அலாகாபாத் நீதிமன்றம்,  அந்த இடத்தை 3 தரப்பினரும் சரிசமமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று கடந்த 2010-இல் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்களை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ.நஸீர் ஆகியோரைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

இதனிடையே, இந்த விவகாரத்தில் சமரசத் தீர்வு காண்பதற்கு உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஃப்.எம்.ஐ. கலிஃபுல்லா தலைமையில் கடந்த மார்ச் மாதம் ஒரு மத்தியஸ்தக் குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது. 3 உறுப்பினர்களைக் கொண்ட அந்தக் குழு 8 வாரங்களில் தனது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. பின்னர், அந்தக் குழுவுக்கு ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சமரசப் பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை என்று அந்தக் குழு கடந்த மாதம், உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதையடுத்து, இந்த வழக்கை உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 6-ஆம் தேதி முதல் தினசரி அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

அக்.18-க்குள் வாதத்தை முடிக்க உத்தரவு: அயோத்தி வழக்கில் விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. விசாரணையை அடுத்த மாதம் 18-ஆம் தேதியுடன் முடித்துக் கொள்ள திட்டமிட்டுள்ளோம்.  அதற்குள், வழக்கில் தொடர்புடைய ஹிந்து மற்றும் முஸ்லிம் தரப்பினர் தங்கள் வாதங்களை முடித்துக் கொள்ள வேண்டும். இதுகுறித்து நீதிமன்றத்திலும் தகவல் தெரிவிக்க வேண்டும்.

இதனிடையே, நீதிபதி எஃப்.எம்.ஐ.கலிஃபுல்லாவிடம் இருந்து ஒரு கடிதம் வந்துள்ளது. அதில், இந்த வழக்கில் சமரசப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் விரும்புதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவர்கள், விரும்பினால் மீண்டும் சமரசப் பேச்சுவார்த்தையைத் தொடங்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்கின் இறுதி விசாரணை, அக்டோபர் 18-ஆம் தேதி நிறைவடைந்தால், இறுதித் தீர்ப்பை நீதிபதிகள் எழுதுவதற்கு 4 வாரங்கள் ஆகும். இதனிடையே, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நவம்பர் 17-ஆம் தேதியுடன் ஓய்வுபெறுகிறார். அதற்கு முன்பாகவே, இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT