இந்தியா

இ-சிகரெட் தயாரிப்பை தடுக்க அவசரச் சட்டம்: மத்திய அரசு ஒப்புதல்

DIN


இ-சிகரெட் தயாரிப்பு, இறக்குமதி, விநியோகம், விற்பனை ஆகியவற்றைத் தடுப்பதற்கான அவசரச் சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

சாதாரண சிகரெட்டைப் போல இ-சிகரெட் என்பதும் உடல் நலத்துக்கு கேடு விளைவிப்பதாகும். எனவே, மத்திய அரசு அதற்கு தடை விதித்து அவசர சட்டம் இயற்ற முடிவு செய்துள்ளது.

தில்லியில் புதன்கிழமை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், இ-சிகரெட்டுக்குத் தடை விதிப்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இறுதியாக, அவற்றின் இறக்குமதி, தயாரிப்பு, விநியோகம், விற்பனை ஆகியவற்றுக்கு தடை விதிக்க அவசரச் சட்டத்தைக் கொண்டுவர ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது தொடர்பான பரிந்துரை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் ஒப்புதல் அளித்தவுடன் தடை அமலுக்கு வரும்.

இ-சிகரெட்டுக்குத் தடை விதிப்பது தொடர்பாக ஆலோசிக்க அமைக்கப்பட்டிருந்த அமைச்சர்கள் குழுவின் தலைவரான  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து அவர் கூறியதாவது:

இ-சிகரெட்டுக்கு இந்தியாவில் முழுமையாக தடைவிதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏனெனில், இது மக்களின் உடல் நலன் சார்ந்த பிரச்னையாகும். இந்தத் தடையை மீறி இ-சிகரெட்டை விற்பனை செய்வது, வைத்திருப்பது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு முதல் முறை ரூ.1 லட்சம் அபராதமும், ஓராண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். இரண்டாவது முறையாக அதே தவறைச் செய்தால் 3 ஆண்டு சிறையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.

இது சாதாரண சிகரெட்டைவிட பாதிப்பை குறைவாக ஏற்படுத்துமா? அதிகமாக ஏற்படுத்துமா? என்பது குறித்து ஆலோசிக்கத் தேவையில்லை. எப்படியும் உடல் நலனுக்கு தீங்கு விளைவிப்பதுதான். எனவே, இ-சிகரெட்டுக்கு தொடக்கத்திலேயே தடை விதிக்க முடிவெடுக்கப்பட்டது என்றார்.
உடனிருந்த மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறுகையில், எதையுமே, வரும் முன் காப்பது நல்லது. அந்த வகையில் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு பொருளுக்கு, பரவலாக பயன்படுத்தப்படும் முன்பே மத்திய அரசு தடை விதித்துவிட்டது. இந்த அவசரச் சட்டம் அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது மசோதாவாக அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

ஒடிஸா அரசு முதல்வர் நவீன் பட்நாயக் கைவசமில்லை -ராகுல் காந்தி பிரசாரம்

SCROLL FOR NEXT