முகப்பு
இந்தியா

கோரக்பூர் மருத்துவமனையில் 72 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்: மருத்துவர் விடுவிப்பு

உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 72 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டிருந்த மருத்துவர் கஃபீல் கான் மீது எவ்வித தவறும் இல்லை

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:13 AM
பகிர்:

உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 72 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டிருந்த மருத்துவர் கஃபீல் கான் மீது எவ்வித தவறும் இல்லை என்று அந்த மாநில அரசு நியமித்த விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

கோரக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி முதல் தொடர்ந்து ஒரு வாரத்தில் 72 குழந்தைகள் உயிரிழந்தன. அதில் இரு நாள்களில் மட்டும் 60 குழந்தைகள் உயிரிழந்தன.

மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக குழந்தைகள் உயிரிழந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. ஆக்ஸிஜன் சிலிண்டர் வழங்கி வந்த நிறுவனத்துக்கு சிலிண்டருக்கான பணத்தை அளிக்காமல் மருத்துவமனை நிர்வாகம் நீண்ட நாள்களாக பாக்கி வைத்ததாகவும், அதனால் சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டை மறுத்த மாநில அரசு, மூளை காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களின் காரணமாக குழந்தைகள் இறந்ததாக தெரிவித்தது. 

இந்த விவகாரத்தில், அந்த மருத்துவமனையில் பணியாற்றிய குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் கஃபீல் கான் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். பணியில் கவனக்குறைவுடன் செயல்பட்டதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதுமட்டுமன்றி, இந்த விவகாரம் குறித்த விசாரணைக்கு, விசாரணைக் குழுவை மாநில அரசு நியமித்தது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் இருந்து கஃபீல் கான் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக விசாரணை அதிகாரிகள் கூறுகையில், "மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் கொள்முதல் செய்யும் பணி, மருத்துவர் கஃபீல் கானுக்கு ஒதுக்கப்படவில்லை. மேலும், குழந்தைகள் இறந்த பிரிவிலும் அவர் பணியாற்றவில்லை. குழந்தைகள் இறப்புக்கும், அவருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அதனால், இந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்படுகிறார். அதற்கான உத்தரவு வியாழக்கிழமை அவருக்கு வழங்கப்பட்டது' என்றனர்.

இதுகுறித்து கஃபீல் கான் கூறுகையில், "குழந்தைகள் உயிரிழப்புக்கும், எனக்கும் தொடர்பில்லை என்று கடந்த ஆண்டு எனக்கு ஜாமீன் அளித்தபோதே அலாகாபாத் நீதிமன்றம் கூறியது. இப்போது விசாரணை அதிகாரிகளும் கூறிவிட்டனர். இன்னும் என்னை பணியில் மீண்டும் சேர்க்காமல் இருப்பது ஏன் என தெரியவில்லை' என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →