எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி பேசியது வரவேற்கத்தக்கது: ப.சிதம்பரம்
எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி பேசியது வரவேற்கத்தக்கது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி பேசியது வரவேற்கத்தக்கது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதன் ஒருபகுதியாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி நேற்று காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து ப.சிதம்பரம் தனது டிவிட்டரில், இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் முக்கியமான 2 வார காலகட்டத்திற்குள் நுழைகிறது. எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி பேசியது வரவேற்கத்தக்கது. கரோனாவை கட்டுப்படுத்த எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமில்லை. அரசு எடுத்த நடவடிக்கையில் குறைகளை எடுத்துக்கூறினால் அதை ஆக்கப்பூர்வமான விமர்சனமாக பார்க்க வேண்டும்.
எல்லா வல்லுநர்களும் ஒரு முகமாக ஏற்றுக் கொள்ளும் கருத்து: மிகப் பரவலாக, மிக அவசரமாக, மிக வேகமாக பரிசோதனை செய்ய வேண்டும். இதனை அரசு இன்றே தொடங்கவேண்டும். எல்லா மாநிலங்களுக்கும் முன் உதாரணமாக தமிழ்நாடு அரசு இந்தப் பரவலான அதிகமான பரிசோதனைத் திட்டத்தை இன்றே தொடங்கவேண்டும்” என்றார்.