முகப்பு
இந்தியா

தாடை மாற்று அறுவை சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனை வாயிலில் தந்தையுடன் காத்திருக்கும் சிறுமி

ஊரடங்கு.. கரோனா எனும் பெருந்தொற்றில் இருந்து மக்களைக் காக்க மத்திய, மாநில அரசுகளால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுதான் என்ற போதிலும் இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் ஏராளம்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:31 PM
பகிர்:

ஊரடங்கு.. கரோனா எனும் பெருந்தொற்றில் இருந்து மக்களைக் காக்க மத்திய, மாநில அரசுகளால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுதான் என்ற போதிலும் இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் ஏராளம்.

அவர்களில் ஒருவர்தான் ஸ்நேகா குமாரி. தனது தாடையில் பொறுத்தப்பட்டிருந்த பிளேட் இடம்மாறிவிட்டதால், அறுவை சிகிச்சைக்காக நேபாளத்தில் இருந்து தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தனது நடக்க முடியாத தந்தையுடன் மார்ச் மாதம் வந்தவர், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், மருத்துவமனை வாயிலில் இருக்கும் முகாமில் தங்கியுள்ளார்.

தன்னார்வலர்கள் கொடுக்கும் உணவை சாப்பிட்டுக் கொண்டு, ஊரடங்கு காலத்தை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

தாடையில் ஏற்பட்ட புற்றுநோய்க் கட்டியை அகற்ற 2018ம் ஆண்டு எய்ம்ஸ் வந்த ஸ்நேகா குமாரிக்கு அறுவை சிகிச்சை மூலம் கட்டியுடன் சேர்த்து தாடை எலும்பு அகற்றப்பட்டு மெட்டல் பிளேட்டை பொறுத்தினர்.

ஒரு ஆண்டுக்குப் பிறகு மீண்டும் அறுவை சிகிச்சை செய்து, மெட்டல் பிளேட்டை அகற்றிவிட்டு, அவரது உடலில் இருந்து தொடை எலும்பை எடுத்து தாடை எலும்பாகப் பொறுத்துவதாக மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

இந்த நிலையில், ஸ்னேகாவின் தந்தை கிஷோர் (39), முதுகெலும்பில் ஏற்பட்ட காயத்தால் நடக்கமுடியாமல் இருக்கிறார்.

இதற்குள் தாடையில் பொருத்தப்பட்டிருந்த மெடல் பிளேட் இடம் மாறி, ஸ்னேகாவுக்கு கடும் வலியை ஏற்படுத்தி வருகிறது. இந் நிலையில்தான், கிஷோர்  தனது மகள் ஸ்நேகாவை அழைத்துக் கொண்டு மார்ச் 25ம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் நடைபெறவிருந்த அறுவை சிகிச்சைக்காக தில்லி வந்த நிலையில், ஊரடங்கால்  அறுவை சிகிச்சை தள்ளிப்போனது.  சொந்த ஊருக்கும் போக முடியாமல் மருத்துவமனை வாசலிலேயே தந்தையும், மகளும் காத்திருக்கிறார்கள்.

எனது தாடையில் மெட்டல் பிளேட் இடம்மாறிவிட்டதால், தன்னார்வலர்கள் கொடுக்கும் உணவைக் கூட சாப்பிட முடியவில்லை என்கிறார் கவலையோடு. கடும் வலியால் அவதிப்பட்டு வரும் ஸ்னேகா தற்போது எதிர்பார்ப்பது குழைந்த நிலையில் சோறு அல்லது கஞ்சிதான்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.