கர்நாடகத்தில் நிலச்சரிவு: காணாமல் போன 4 பேரை தேடும் பணி தீவிரம்
கர்நாடகத்தில் குடகு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 4 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக குடகு துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
குடகு: கர்நாடகத்தில் குடகு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 4 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக குடகு துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
பருவமழை காரணமாக கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு, பாலம் சேதம், நிலச்சரிவு உள்ளிட்ட பல்வேறு இன்னல்கள் ஏற்பட்டு வருகின்றன.
அந்தவகையில் தொடர் கனமழை காரணமாக கர்நாடகத்தில் குடகு மாவட்டத்தில் தலைகாவேரி பகுதியில் நேற்று (ஞாயிற்றுக் கிழமை) நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஐந்து பேர் சிக்கினர். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற மீட்பு படையில் ஒருவர் மீட்கப்பட்டார். மற்ற நான்கு பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது குறித்து குடகு மாவட்ட துணை ஆணையர் அன்னீஸ் கண்மணி பேசியதாவது, நிலச்சரிவு மீட்பு பணிகளில் மாநில பேரிடர் மீட்பு படையினரும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவில் ஒருவர் உடல் மீட்கப்பட்ட நிலையில், காணாமல் போன 4 பேரின் உடல்கள் தேடப்பட்டு வருகின்றன என்று கூறினார்.
தொடர் மழையின் காரணமாக சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள சிரிங்கேரி, குத்ரேமுக், மங்களூர் இடையே வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. தொடர் கனமழையால் குடகு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மீட்பு பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது.