முகப்பு
இந்தியா

பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: ராணுவ மருத்துவமனை

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், செயற்கை சுவாசக் கருவியின் உதவியோடு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ராணுவ மருத்துவமனை தெரிவித்த

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:06 PM
பிரணாப் முகர்ஜிக்கு செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை: ராணுவ மருத்துவமனை
பகிர்:


முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், செயற்கை சுவாசக் கருவியின் உதவியோடு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

பிரணாப் முகர்ஜி (84) திங்கள்கிழமை மதியம் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளை ரத்த நாளங்களில் ஏற்பட்ட அடைப்பை நீக்குவதற்கான அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, மூளை ரத்த நாளங்களில் இருந்த அடைப்பு நீக்கப்பட்டது. எனினும் அவா் தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உடல்நிலையை பலதுறை நிபுணர்கள் அடங்கிய மருத்துவர்கள் குழு கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, "முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகஸ்ட் 10-ம் தேதி நள்ளிரவு ராணுவ மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவரது மூளை ரத்த நாளத்தில் மிகப்பெரிய ரத்த அடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாக உயிர் காக்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது, அவருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நடத்தப்பட்ட பரிசோதனையின்போது அவருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.

அறுவைச் சிகிச்சைக்கு முன்பாக பிரணாப் முகா்ஜி தனக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தன்னோடு தொடா்பில் இருந்தவா்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும், கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறும் தனது சுட்டுரையில் பதிவிட்டிருந்தாா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.