முகப்பு
இந்தியா

சோனியாவுக்கு எதிராகக் கடிதம்: பாஜகவின் சதி இருப்பதாக ராகுல் புகார்; காரசார விவாதம்

சோனியாவுக்கு எதிராகக் கடிதம் எழுதிய விவகாரத்தில் பாஜகவின் சதி இருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டிய நிலையில், அது குறித்து காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் காரசார விவாதம் ஏற்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி
பகிர்:

புது தில்லி: சோனியாவுக்கு எதிராகக் கடிதம் எழுதிய விவகாரத்தில் பாஜகவின் சதி இருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டிய நிலையில், அது குறித்து காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் காரசார விவாதம் ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தலைவர் வேண்டும் என்றும், தலைமை மாற்றம் தேவை என்றும் சில முக்கியத் தலைவர்கள் கடிதம் எழுதியதை அடுத்து, காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலக சோனியா முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், தில்லியில் இன்று காலை அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக தொடங்கியது.

இந்தக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா குறித்து கடிதம் எழுதியிருப்பது பாஜகவின் சதி என்று குற்றம்சாட்டியிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய ராகுல், சோனியாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தலைமை மாற்றம் குறித்து கடிதம் எழுத வேண்டியதன் அவசியம் என்ன? தலைமை மாற்றம் வேண்டி காங்கிரஸ் தலைவர்கள் எழுதிய கடிதம், பொது வெளியில் வெளியானது எப்படி? என்றும் கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து, செயற்குழுக் கூட்டத்தில் ராகுல் காந்திக்கும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்கள் சிலருக்கும் இடையே காரசார வாக்குவாதம் எழுந்துள்ளது.

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் கபில் சிபல் தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ராகுல் காந்தி, நாங்கள் பாஜகவுடன் இணைந்துவிட்டதாகக் கூறுகிறார். கடந்த 30 ஆண்டுகளாக எந்த விவகாரத்திலும் பாஜக ஆதரவாக ஒரு கருத்தைக் கூட கூறியதில்லை. ஆனால் தற்போது நாங்கள் பாஜகவுடன் இணைந்து செயல்படுவதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது என்று தனது கருத்தை முன் வைத்துள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜிநாமா செய்தார். இதையடுத்து, கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10-ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், கட்சியை கூட்டுத் தலைமை வழிநடத்த வேண்டும்; அமைப்பு ரீதியாகவும், தலைமையிலும் மாற்றம் கொண்டுவர வேண்டும் என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் 23 பேர், சோனியா காந்திக்கு கடிதம் அண்மையில் கடிதம் எழுதினர். அதில், கபில் சிபலும் ஒருவர்.

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்திருக்கும் குலாம் நபி ஆஸாத், பாஜகவுடன் இணைந்து செயல்படுவதாக ராகுல் காந்தி கூறும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் நான் பதவி விலகுகிறேன் என்று தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
 

முழு கட்டுரையைப் படிக்க →