காந்தி குடும்பத்தைத் தவிர வேறு யாரையும் கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்ளமாட்டோம்: தொண்டர்கள் முழக்கம்
காந்தி குடும்பத்தைத் தவிர வேறு யாரும் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டால் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என காங்கிரஸ் தொண்டர்கள் கட்சியின் தலைமை அலுவலகம் முன்பு முழக்கமிட்டனர்.
காந்தி குடும்பத்தைத் தவிர வேறு யாரும் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டால் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என காங்கிரஸ் தொண்டர்கள், கட்சியின் தலைமை அலுவலகம் முன்பு முழக்கமிட்டனர்.
காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்று ஓர் ஆண்டு காலமான நிலையில், கட்சியின் அடுத்த தலைவர் யார் என்ற பேச்சு எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினர் சோனியா காந்தி தலைமையைத் தொடர வேண்டும் என்றும் மற்றொரு பிரிவினர் ராகுல் காந்தி தலைமையேற்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்து வருகின்றனர்.
கட்சியில் அமைப்பு ரீதியாகவும், தலைமையிலும் மாற்றம் கொண்டுவர வேண்டும் என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் 23 பேர், சோனியா காந்திக்கு அண்மையில் கடிதம் எழுதியுள்ளனர். இதையடுத்து, கட்சித் தலைமை குறித்து விவாதிக்க காங்கிரஸ் செயற்குழு கூட்டம் இன்று(திங்கள்கிழமை) கூடியுள்ளது. இதனால் கட்சித் தலைமை அலுவலகம் முன்பாக காங்கிரஸ் கட்சியினர் பலர் கூடியுள்ளனர்.
மேலும் அவர்கள், 'காந்தி குடும்பத்தில் உள்ளோரைத் தவிர வேறு யாரும் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டால் ஏற்றுக்கொள்ள மாட்டோம்' என்று முழக்கமிட்டு வருகின்றனர். இதையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், மாநிலத் தலைவர்கள் அனைவரும் சோனியா காந்தி தலைமையில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் அல்லது ஒருமித்த கருத்துடன் ராகுல் காந்தி தலைமையேற்க வேண்டும் என்று தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.