முகப்பு
இந்தியா

ராகுல் விளக்கமும் கபில் சிபலின் சுட்டுரை நீக்கமும்

காங்கிரஸ் கட்சிக்குள், தலைமையை மாற்றுவது தொடர்பான உள்கட்சி பூசல் எழுந்த நிலையில், ராகுல் காந்தி அளித்த விளக்கத்தை ஏற்று, கபில் சிபல் தனது சுட்டுரைப் பதிவை நீக்கியுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
ராகுல் விளக்கமும் கபில் சிபலின் சுட்டுரை நீக்கமும்
பகிர்:

காங்கிரஸ் கட்சிக்குள், தலைமையை மாற்றுவது தொடர்பான உள்கட்சி பூசல் எழுந்த நிலையில், ராகுல் காந்தி அளித்த விளக்கத்தை ஏற்று, கபில் சிபல் தனது சுட்டுரைப் பதிவை நீக்கியுள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தலைவர் வேண்டும் என்றும், தலைமை மாற்றம் தேவை என்றும் சில முக்கியத் தலைவர்கள் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியதை அடுத்து, காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலக சோனியா முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த பரபரப்பான நிலையில், தில்லியில் இன்று காலை அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக தொடங்கியது.

சோனியாவுக்கு எதிராக கடிதம் எழுதிய விவகாரத்தில் பாஜகவின் சதி இருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியதாகவும், அது குறித்து காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் காரசார விவாதம் நடந்ததாகவும் கூறப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா குறித்து கடிதம் எழுதியிருப்பது பாஜகவின் சதி. சோனியாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தலைமை மாற்றம் குறித்து கடிதம் எழுத வேண்டியதன் அவசியம் என்ன? தலைமை மாற்றம் வேண்டி காங்கிரஸ் தலைவர்கள் எழுதிய கடிதம், பொது வெளியில் வெளியானது எப்படி? என்று செயற்குழுக் கூட்டத்தில் ராகுல் கேள்வி எழுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் கபில் சிபல் தனது சுட்டுரைப் பக்கத்தில், ராகுல் காந்தி, நாங்கள் பாஜகவுடன் இணைந்துவிட்டதாகக் கூறுகிறார். கடந்த 30 ஆண்டுகளாக எந்த விவகாரத்திலும் பாஜக-வுக்கு ஆதரவாக ஒரு கருத்தைக் கூட கூறியதில்லை. ஆனால் தற்போது நாங்கள் பாஜகவுடன் இணைந்து செயல்படுவதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது என்று தனது எதிர்ப்பை முன் வைத்திருந்தார்.

இதற்கிடையே, ராகுல் காந்திக்கு எதிராக தான் இட்ட சுட்டுரைப் பதிவுகளை நீக்கிவிட்டதாகக் கூறியிருக்கும் கபில் சிபல், தன்னை நேரடியாகத் தொடர்பு கொண்ட ராகுல் காந்தி, தான் அவ்வாறு கூறவில்லை என்று விளக்கம் அளித்ததை அடுத்து, தனது சுட்டுரைப் பதிவுகளை நீக்கிவிட்டதாக சுட்டுரையில் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜிநாமா செய்தார். இதையடுத்து, கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10-ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், கட்சியை கூட்டுத் தலைமை வழிநடத்த வேண்டும்; அமைப்பு ரீதியாகவும், தலைமையிலும் மாற்றம் கொண்டுவர வேண்டும் என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் 23 பேர், சோனியா காந்திக்கு கடிதம் அண்மையில் கடிதம் எழுதினர். அதில், கபில் சிபலும் ஒருவர்.

இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுர்ஜேவாலா கூறியிருப்பதாவது, ராகுல் காந்தி இதுபோன்ற எந்த வார்த்தையையும் குறிப்பிடவில்லை. தயவு கூர்ந்து தவறான தகவல்கள் மற்றும் போலியான புரளிகளை நம்ப வேண்டாம், நாம் ஒருவருக்குள் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டு, ஒருவரை ஒருவர் துன்புறுத்திக் கொள்ளாமல், நரேந்திர மோடி அரசுக்கு எதிராக ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று விளக்கம் அளித்துள்ளார்.

ராகுல் காந்தி கூறியதாக வெளியான குற்றச்சாட்டுக்கு பதிலளித்திருந்த மற்றொரு காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆஸாத், பாஜகவுடன் இணைந்து செயல்படுவதாக ராகுல் காந்தி கூறும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் நான் பதவி விலகுகிறேன் என்று தெரிவித்திருந்ததாகவும் ஏஎன்ஐ செய்தி வெளியாகியிருந்தது. குலாம் நபி ஆஸாத்தும் தனது கருத்தை திரும்பப் பெறுவதாகக் கூறப்பட்டுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →