முகப்பு
இந்தியா

ஒடிசாவில் ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகளுக்கு இலவசப் பேருந்து சேவை

ஒடிசா மாநிலத்தில் ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கு வசதியாக தேர்வு மையங்களுக்கு இலவச பேருந்து சேவையை மாநில அரசு அறிவித்துள்ளது. 

Updated On : 29 ஆகஸ்ட், 2020 at 11:24 AM
ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக்
பகிர்:

ஒடிசா மாநிலத்தில் ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கு வசதியாக தேர்வு மையங்களுக்கு இலவச பேருந்து சேவையை வழங்குவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. 

பொறியியல் தகுதித் தேர்வு ஜேஇஇ  மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வு நீட் தேர்வுகளை செப்டம்பர் மாதம் நடத்த மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கரோனா மத்தியில் மாணவர்களை தேர்வுகள் எழுதக் கட்டாயப்படுத்துவதாகக் கூறி பல்வேறு மாநில அரசுகளும், அரசியல் கட்சித் தலைவர்களும் விமர்சனங்களை எழுப்பி வந்தனர்.

ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருவது குறித்து விளக்கமளித்த மத்திய அரசு திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் என தெரிவித்தது.

Advertisement

கரோனா பொதுமுடக்கம் அமலில் இருக்கும் நிலையில் பொதுப்போக்குவரத்துகளான பேருந்து, ரயில் போன்ற சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு மாணவர்களுக்கு சிரமங்களை சந்திப்பர் எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் மாணவர்களின்  நலன்கருதி ஜேஇஇ மற்றும் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு சென்றுவர இலவச பேருந்து சேவையை வழங்குவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

ஒடிசா மாநில தலைமைச் செயலாளர் ஆசித் திரிபாதி கூறுகையில், மாநிலம் முழுவதும் தேர்வு எழுதும் 37 ஆயிரம் மாணவர்களுக்கு பேருந்து சேவை வழங்கப்படும். வீட்டிலிருந்து தேர்வு மையம் வரை சென்று வர ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.” என்றார்.

முன்னதாக நீட் மற்றும் ஜேஇஇ தேர்வு நடத்துவதற்கு அனுமதி வழங்கியதை மறுஆய்வு செய்யக்கோரி மேற்குவங்கம், ஜார்க்கண்ட், பஞ்சாப், சத்தீஸ்கர், மகாராஷ்டிரம் ஆகிய மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.