‘விவசாயிகளுடன் நிற்க வேண்டியது நமது கடமை’: சிவசேனை எம்.பி. கருத்து
நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவளித்து விவசாயிகள் பக்கம் நிற்க வேண்டியது நமது கடமை என சிவசேனை நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரெளத் செவ்வாய்க்கிழமை கருத்து தெரிவித்தார்.
நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவளித்து விவசாயிகள் பக்கம் நிற்க வேண்டியது நமது கடமை என சிவசேனை நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரெளத் செவ்வாய்க்கிழமை கருத்து தெரிவித்தார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் தில்லியில் விவசாயிகள் கடந்த 13 நாள்களாக போராடி வருகின்றனர். இதுகுறித்து மத்திய அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தைகளில் உறுதியான முடிவுகள் எட்டப்படாத நிலையில் செவ்வாய்க்கிழமை நாடு முழுவதுமான முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துப் பேசிய சிவசேனை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் ரெளத், “அரசுக்கு இதயம் என ஒன்று இருந்தால் அது உள்துறை அமைச்சராக இருந்தாலும் சரி, பிரதமராக இருந்தாலும் சரி, அவர்களே விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவர்” எனத் தெரிவித்தார்.
மேலும், “இது அரசியலுக்கான முழு அடைப்பு இல்லை. இது எங்கள் உணர்வு. தில்லியில் போராடும் விவசாயிகள் எந்தவொரு அரசியல் கொடியையும் பிடித்து நிற்கவில்லை. விவசாயிகளுடன் ஒற்றுமையுடன் நிற்பது மற்றும் அவர்களின் உணர்வுகளுடன் இணைந்திருப்பது எங்கள் கடமை. இங்கே அரசியல் இல்லை. இருக்கவும் கூடாது” என சஞ்சய் ரெளத் வலியுறுத்தினார்.