முகப்பு
இந்தியா

இன்னும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளாரா கேஜரிவால்?

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக ஆம் ஆத்மி தொடர்ந்து குற்றஞ்சாட்டிவரும் நிலையில், தில்லி காவல்துறையும் அதனை தொடர்ந்து மறுத்து வருகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:04 PM
தில்லி முதல்வர் கேஜரிவால் விவகாரத்தில் நீடிக்கும் மர்மம்
பகிர்:

புது தில்லி: தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக ஆம் ஆத்மி தொடர்ந்து குற்றஞ்சாட்டிவரும் நிலையில், தில்லி காவல்துறையும் அதனை தொடர்ந்து மறுத்து வருகிறது.

அரவிந்த் கேஜரிவால் தொடர்ந்து காவல்துறை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும், அவரது வீட்டின் கதவு மூடியே வைக்கப்பட்டிருப்பதாகவும்  ஆம் ஆத்மி கூறியிருக்கும் நிலையில், அவரை யாரும் காவலில் வைத்திருக்கவில்லை, அவர் இன்று காலை 11 மணிக்குக் கிளம்பி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் சென்றுவிட்டதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

ஆம் ஆத்மியின் குற்றச்சாட்டு முற்றிலும் அடிப்படை ஆதாரமில்லாதது என்றும் தில்லி காவல்துறை கூறியுள்ளது.

ஆனால், மத்திய உள்துறை அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், காவல்துறையின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளார். அவர்களது வீட்டின் முக்கிய நுழைவாயில் மூடப்பட்டுள்ளது. இது ஒரு அறிவிக்கப்படாத அவசர நிலை போலவே உள்ளது. மைதானத்தை, விவசாயிகளை அடைத்து வைக்கும் சிறைச்சாலையாக மாற்றிக் கொள்ள நாங்கள் அனுமதி அளிக்காததாலேயே இவ்வாறு செய்கிறார்கள் என்றும் ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.

விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நேற்று நாடு முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்ற நிலையில், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை தில்லி காவல் துறை வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியிருந்தது.

முதல்வரை சந்திக்கச் சென்ற துணை முதல்வா் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட ஆம் ஆத்மி தலைவா்களுக்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து அவர்கள் அங்கேயே அமர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

ஆனால், கேஜரிவாலை வீட்டுச் சிறையில் வைக்கவில்லை. அவா் விரும்பிய இடத்துக்கு சென்று வரலாம் என்று காவல்துறை தெரிவித்திருந்தது.

இது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடா்பாளா் செளரவ் பரத்வாஜ் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி: சிங்கு எல்லைக்கு சென்று விவசாயிகளின் போராட்டத்துக்கு கேஜரிவால் ஆதரவு தெரிவித்தாா். அதில் இருந்து அவரை வீட்டுச் சிறையில் தில்லி காவல்துறை வைத்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி உத்தரவுப்படி இது நடந்துள்ளது. அவரது இல்லத்தில் இருந்து யாரும் வெளியில் செல்லவோ உள்ளே வரவோ அனுமதிக்கபடவில்லை. கேஜரிவாலை சந்திக்க வருபவா்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் முதல்வரைச் சந்திக்க சென்ற போது, அவா்கள் மீது தில்லி காவலர்கள் தாக்குதல் நடத்தினா். அதேபோன்று ஆம் ஆத்மி தொண்டா்களும் காவல்துறையினரால் தாக்கப்பட்டுள்ளனா்.

முதல்வரின் இல்லம் முன் போராட்டம் நடத்தும் பாஜக தலைவா்களை காவல் துறை வரவேற்றுள்ளது. ஆனால், கேஜரிவால் வீட்டில் பணியாற்றும் பணிப் பெண்ணைக் கூட காவல் துறை உள்ளே அனுமதிக்கவில்லை. பாரத் பந்த் நடக்கும் தினத்தில், தில்லி மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட முதல்வா், விவசாயிகளுக்கு ஆதரவாக களம் இறங்குவதைத் தடுக்கும் நோக்கில் மத்திய அரசு கேஜரிவாலை வீட்டுக் காவலில் வைத்துள்ளது என்றாா் அவா்.

சிசோடியாவுக்கு அனுமதி மறுப்பு!: இந்த நிலையில், கேஜரிவாலை சந்திக்க அவரது இல்லத்துக்குச் சென்ற துணைமுதல்வா் மணீஷ் சிசோடியாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுடன் கேஜரிவால் இல்லம் அருகில் மணீஷ் சிசோடியா தா்னாவில் ஈடுபட்டாா். இது தொடா்பாக மணீஷ் சிசோடியா கூறுகையில், ‘தில்லியின் முதல்வரை சந்திக்க துணை முதல்வருக்கே அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால், அமித் ஷாவின் காவல் துறை, கேஜரிவால் வீட்டுக் காவலில் வைக்கப்படவில்லை என்று கூறுகிறது. விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பது அவ்வளவு பெரிய குற்றமா? போராட்டம் நடத்தும் விவசாயிகளை அடைத்து வைக்க விளையாட்டு அரங்குகளை தற்காலிக சிறைகளாக மாற்றும் காவல் துறையின் கோரிக்கையை தில்லி அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்கு பதிலடியாக, தில்லி காவல் துறை கேஜரிவாலை வீட்டுக் காவலில் வைத்துள்ளது’ என்றாா்.

தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் கூறுகையில் ‘கேஜரிவாலை வீட்டுச் சிறையில் வைத்ததன் மூலம், விவசாயிகளுக்கு ஆதரவான அனைத்துக் குரல்களையும் ஒடுக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது’ என்றாா்.

தில்லி காவல் துறை மறுப்பு

கேஜரிவாலை வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ள குற்றச்சாட்டை தில்லி காவல் துறை மறுத்துள்ளது. இது தொடா்பாக காவல்துறை மூத்த அதிகாரி கூறுகையில், ‘முதல்வா் கேஜரிவால் விரும்பிய இடத்துக்குச் செல்லலாம். பாஜக - ஆம் ஆத்மி தொண்டா்களிடையே மோதலைத் தடுக்கும் வகையில், கேஜரிவால் இல்லத்துக்கு அருகில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளோம். திங்கள்கிழமை இரவுகூட கேஜரிவால் வெளியில் சென்று வந்தாா். அவரை வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக வெளிவரும் தகவல்கள் பொய்யானவை’ என்று கூறியிருந்தார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →