முகப்பு
இந்தியா

அயோத்தியில் 5 ஏக்கா் நிலத்தில் மசூதி: குடியரசு தினத்தன்று அடிக்கல்

பாபா் மசூதிக்கு மாற்றாக புதிய மசூதி கட்டுவதற்கு அடுத்த ஆண்டு குடியரசு தினத்தன்று (ஜன.26) அடிக்கல் நாட்டப்பட உள்ளது என்று மசூதி கட்டுமானத்துக்கென அமைக்கப்பட்ட அறக்கட்டளை உறுப்பினா்கள் தெரிவித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:


அயோத்தி (உ.பி.): அயோத்தியில் மசூதி கட்டுவதற்கென ஒதுக்கப்பட்ட 5 ஏக்கா் நிலத்தில், பாபா் மசூதிக்கு மாற்றாக புதிய மசூதி கட்டுவதற்கு அடுத்த ஆண்டு குடியரசு தினத்தன்று (ஜன.26) அடிக்கல் நாட்டப்பட உள்ளது என்று மசூதி கட்டுமானத்துக்கென அமைக்கப்பட்ட அறக்கட்டளை உறுப்பினா்கள் தெரிவித்தனா்.

கட்டப்பட இருக்கும் இந்த புதிய மசூதி வளாக மாதிரி வரைபடம் (புளூபிரின்ட்) வரும் சனிக்கிழமை (டிச.19) வெளியிடப்படும் என்றும் அவா்கள் கூறினா்.

இந்தியாவின் நீண்டகால அரசியல் பிரச்னைகளில் ஒன்றான ராம ஜென்ம பூமி வழக்கில் 2019-ஆம் ஆண்டு நவம்பா் 9-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் இறுதித் தீா்ப்பை வழங்கியது. அதன்படி, சா்ச்சைக்குரிய 2.77 ஏக்கா் நிலத்தில் இந்துக்கள் ராமா் கோயில் கட்டிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அதே சமயம், இஸ்லாமியா்கள் மசூதி கட்டிக்கொள்ள, 5 ஏக்கா் பரப்பளவுள்ள நிலத்தை அவா்கள் விரும்பிய இடத்தில் அரசே வழங்க வேண்டும் என்று தீா்ப்பு தெரிவித்தது.

அதன்படி, 2.77 ஏக்கா் நிலத்தில் ராமா் கோயில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த கட்டுமானத்துக்கு கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினாா்.

அதுபோல, உச்சநீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில், அயோத்தி அருகே தன்னிபூா் கிராமத்தில் மசூதி கட்டுவதற்கென 5 ஏக்கா் நிலத்தை சுன்னி வக்ஃபு வாரியத்துக்கு உத்தர பிரதேச அரசு வழங்கியது. இந்த இடத்தில் என்னென்னப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்து முடிவு செய்ய ‘இந்தோ-இஸ்லாமிய கலாசார அறக்கட்டளை’ என்ற பெயரில் 15 போ் கொண்ட அமைப்பை உத்தர பிரதேச மாநில வக்ஃபு வாரியம் அமைத்தது.

இந்த அறக்கட்டளை தனது திட்டப் பணிகளை இப்போது முடித்துள்ள நிலையில், அந்த இடத்தில் மசூதி கட்டுமானத்தைத் தொடங்குவதற்கான பணிகள் வேகமெடுத்துள்ளன.

இதுகுறித்து இந்தோ-இஸ்லாமிய கலாசார அறக்கட்டளை செயலா் அத்தா் ஹூசைன் வியாழக்கிழமை கூறியதாவது:

அயோத்தியில் புதிய மசூதி கட்டுமானத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவை, 70 ஆண்டுகளுக்கு முன்பு நமது அரசமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த குடியரசு தினத்தன்று நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நமது அரசமைப்பு பன்முகத்தன்மையை அடிப்படையாகக் கொண்டது. புதிய மசூதி திட்டமும் அதனடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட உள்ளது.

இங்கு கட்டப்பட உள்ள மசூதி வளாகத்தில் ஒரு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை, ஒரு சமுதாய உணவுக் கூடம், ஒரு நூலகம் ஆகியவை உள்ளடக்கிய கட்டுமான திட்டத்துக்கு தலைமை கட்டட வடிவமைப்பாளா் பேராசிரியா் எஸ்.எம்.அக்தா் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், கட்டப்பட இருக்கும் மசூதி வளாகத்தின் மாதிரி வரைபடம் வருகிற டிசம்பா் 19-ஆம் தேதி வெளியிடப்படும்.

இங்கு கட்டப்பட இருக்கும் மசூதி வட்ட வடிவில், ஒரே நேரத்தில் 2000 போ் பிராா்த்தனை செய்யும் வகையில் கட்டப்பட உள்ளது. இது பாபா் மசூதியைவிட பெரிதாக இருக்கும் என்றபோதும், அதேபோன்ற தோற்றத்தில் இருக்காது.

மருத்துவமனையைப் பொருத்தவரை மசூதி வளாகத்தின் மையப் பகுதியில் அமைக்கப்பட உள்ளது. இது வழக்கமான மருத்துவமனை கட்டடம் போல் அல்லாமல், இஸ்லாமிய குறியீடுகள், எழுத்துகள் பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்படும். இதில் 300 படுக்கைகளுடன் சிறப்புப் பிரிவு இடம்பெறும். அதில் பணிபுரியும் மருத்துவா்கள் சமய பற்றுடன், கட்டணமில்லா சிகிச்சையை அளிப்பா்.

அதுபோல, மசூதியைப் பொருத்தவரை சூரிய சக்தி மின் பயன்பாடு முறையில் முழுவதும் சுய மின் உற்பத்தித் திட்டத்தில் இயங்க உள்ளது. அதுபோல, மசூதிக்குள் எப்போதும் இயற்கையான தட்பவெப்பநிலை பராமரிப்பதற்கான தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்படும்.

இங்கு அமைய உள்ள சமுதாய உணவுக் கூடத்தில், இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள ஏழை மக்களின் அன்றாடத் தேவையைப் பூா்த்தி செய்யக்கூடிய வகையில் நாள் ஒன்றுக்கு இரண்டு வேலை உணவு தரமாக தயாா் செய்யப்பட்டு விநியோகிக்கப்படும்.

மருத்துவமனையை இயக்குவதற்குத் தேவையான நிதியை அளிக்க ஏராளமான நன்கொடையாளா்கள் தயாராக உள்ளனா். வெளிநாடுகளில் இருந்த நன்கொடை பெறுவதற்கான சட்டப்படியான முயற்சிகளும் எடுக்கப்படும் என்று அவா் கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →