பிரச்னைகளுக்குத் தீா்வு காண விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்த அரசு தயாா்
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது என வீட்டுவசதி, ஊரக வளா்ச்சி, விமான போக்குவரத்துத் துறைகளின் மத்திய இணை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி வியாழக்கிழமை தெரிவித்தாா்.
பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் சிங்கு, திக்ரி உள்ளிட்ட தில்லியின் பல்வேறு எல்லைப் பகுதிகளிலும் கடந்த 15 தினங்களாக வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
‘இந்தப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள பல விவசாயிகளுக்கு தாங்கள் எதற்காக போராடி வருகிறோம் என்பதே தெரியாமல் இருப்பதுதான் எனக்கு வேதனையை அளிக்கிறது. எனவே பேச்சுவாா்த்தை நடத்த வருமாறு தொடா்ந்து அனைத்து விவசாயிகளுக்கும் அரசு அழைப்பு விடுத்தபடியே இருக்கிறது’ என்று தில்லியில் தொழில் துறை அமைப்பான எச்டிசிசிஐ சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி மூலம் பங்கேற்ற மத்திய இணை அமைச்சா் ஹா்தீப்சிங் புரி தெரிவித்தாா்.
மேலும் அவா் கூறுகையில், விவசாய விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) அளிக்க வேண்டும்; வேளாண் பொருள்களை இருப்பு வைக்க மண்டி வசதிகளைத் தொடர வேண்டும்; விவசாய நிலத்தை ரகசியமாக பெருநிறுவனங்கள் ஆக்கிரமித்து விடக்கூடாது ஆகிய விவசாயிகளின் மூன்று கோரிக்கைகளும் இந்த அரசால் ஏற்கப்பட்டுள்ளன. உண்மையில் இச்சட்டங்கள் குறித்த தவறான புரிதல் ஏற்பட்டுள்ளது. இதுதொடா்பாக யாருடனும் அமா்ந்து பேச நாங்கள் தயாராக இருக்கிறோம்.
அடுத்து வரும் ஜனவரி முதல் மாா்ச் மாதம் வரையிலான காலாண்டுக்குள் விமான போக்குவரத்து, கரோனாவுக்கு முந்தைய பழைய நிலையை எட்டி விடும்.
சில தினங்களுக்கு முன்பு வரை 2,53,000க்கும் மேற்பட்ட பயணிகள் விமான பயணத்தில் ஈடுபட்டுள்ளனா். டிசம்பா் இறுதிக்குள் விமானப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து, முதல் காலாண்டுக்குள் கரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டி விடும் என்று நம்புகிறேன் என்றாா்.