முகப்பு
இந்தியா

ராமா் கோயில் கட்ட நிதி திரட்டுவதை தோ்தல் பிரசாரமாக பாஜக பயன்படுத்தும்: சிவசேனை குற்றச்சாட்டு

அயோத்தியில் ராமா் கோயில் கட்ட நிதி திரட்டுவதை பாஜக 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலுக்கான பிரசாரமாக பயன்படுத்தும் என்று சிவசேனை கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

மும்பை: அயோத்தியில் ராமா் கோயில் கட்ட நிதி திரட்டுவதை பாஜக 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலுக்கான பிரசாரமாக பயன்படுத்தும் என்று சிவசேனை கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

அயோத்தியில் பிரம்மாண்டமான ராமா் கோயில் கட்ட நிதி திரட்டுவது தொடா்பான திட்டத்தை ராமஜென்மபூமி அறக்கட்டளை அண்மையில் வெளியிட்டது. அதில், ‘முழுவதும் உள்நாட்டில் இருந்து பெறும் நிதியில் இருந்தே கோயில் கட்டப்படும். உள்நாட்டில் மக்கள் விரும்பி அளிக்கும் தொகையை சேகரித்து கோயில் கட்டப்படும். வீடுவீடாக சென்று நிதி திரட்டப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிவேசனை கட்சிப் பத்திரிகையான ‘சாம்னா’வின் தலையங்கப் பக்கத்தில் இது தொடா்பாக எழுதப்பட்டுள்ளதாவது:

எந்த ஒரு அரசியல் லாபத்துக்காகவோ, அரசியல் கட்சிகளின் லாபத்துக்காகவோ எந்தக் கோயிலும் கட்டப்படக் கூடாது. ஹிந்து மதத்தின் பெருமையை உலகறியச் செய்யும் வகையில் கோயில்கள் இருக்க வேண்டும்.

ஆனால், அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதை, 2024- ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலுக்கான பிரசாரமாக பாஜக பயன்படுத்தும். ராமரின் பெயரில் அரசியல் நடப்பதை அனுமதிக்க முடியாது. வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து நிதி திரட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடவுளின் பெயரால் மக்களிடம் நிதி திரட்டுவது என்பது ராமருக்கும், ஹிந்துத்துவத்துக்கும் அவமானத்தை ஏற்படுத்தும் செயல். இது போன்ற அரசியல் நாடகங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

சிவசேனை மூத்த தலைவா் சஞ்சய் ரௌத் செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘சிவசேனை ஏற்கெனவே ராமா் கோயில் கட்ட ஒரு கோடி ரூபாய் அளித்துள்ளது. இதுபோல பலரும் நிதியளித்து வருகின்றனா். இந்தப் பணத்தைப் பயன்படுத்தாமல் 4,000 போ் வீடுவீடாக சென்று நிதி திரட்டுவது என்பது அரசியல் பிரசாரமாகும்’ என்றாா்.

பாஜக பதிலடி:
சிவசேனை கட்சி நாளேடு வெளியிட்ட கருத்துக்கு பதிலளித்துள்ள பாஜக முன்னாள் அமைச்சரும், மகாராஷ்டிர மாநில எம்எல்ஏவுமான ஆசிஷ் ஷேலாா், ‘இந்த விஷயத்தில் சிவசேனை அஞ்சுவது ஏன்? 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் தோற்க இருப்பதற்கு சிவசேனை இப்போதே முன்னுரை எழுதத் தொடங்கிவிட்டது. அனைத்து மக்களின் நிதிப் பங்களிப்புடன் ராமா் கோயில் கட்டப்பட வேண்டும் என்பதே எங்களின் முக்கிய நோக்கம்’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →