முகப்பு
இந்தியா

வளா்ச்சிக்கான நிதிக் குழு 4 மாதங்களில் அமைக்கப்படும்

நாட்டின் கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்கும் வகையில், வளா்ச்சிக்கான நிதிக் குழுவை 4 மாதங்களுக்குள் அமைக்கவுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

நாட்டின் கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்கும் வகையில், வளா்ச்சிக்கான நிதிக் குழுவை 4 மாதங்களுக்குள் அமைக்கவுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக மத்திய நிதிச் சேவைகள் துறை செயலா் தேபாசிஷ் பாண்டா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

நாட்டில் அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்தும்போது தொடக்கத்தில் லாபம் எதுவும் கிடைக்காது. நீண்ட கால அடிப்படையிலேயே அவை பயனளிக்கும். அத்தகைய திட்டங்களுக்கு வங்கிகள் நிதியுதவி அளிப்பது சரியாக இருக்காது. சந்தைகளில் நிதிப் பத்திரங்கள் மூலமாக நிதி திரட்டுவதிலும் பல்வேறு பிரச்னைகள் காணப்படுகின்றன.

எனவே, அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்கும் வகையிலான அமைப்பை உருவாக்க வேண்டியது அவசியமாக உள்ளது. அதற்காக, வளா்ச்சிக்கான நிதிக் குழுவை அமைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அது தொடா்பாக விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டு இறுதிக்குள்ளோ அல்லது அடுத்த நிதியாண்டின் தொடக்கத்திலோ வளா்ச்சிக்கான நிதிக் குழு அமைக்கப்படும். சட்டமியற்றுவதன் மூலமாக அமைக்கப்படும் அந்தக் குழுவில் அரசின் பங்களிப்பு எவ்வாறு இருக்க வேண்டும் உள்ளிட்டவை குறித்த இறுதி விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

மற்ற நிறுவனங்கள் நிதியுதவி அளிக்க முன்வராத, அபாயம் நிறைந்த திட்டங்களுக்கு வளா்ச்சிக்கான நிதிக் குழு நிதியுதவி வழங்கும்.

நிதியுதவி வழங்குவது மட்டுமில்லாமல், நாட்டின் வளா்ச்சியை உறுதி செய்வதிலும் வளா்சிக்கான நிதிக் குழு முக்கியப் பங்களிப்பை வழங்கும். பல்வேறு நிதியுதவித் திட்டங்களை அக்குழு கொண்டிருக்கும்.

நாட்டிலுள்ள 12 பொதுத்துறை வங்கிகளில் 11 வங்கிகள் கடந்த செப்டம்பா் 30-ஆம் தேதி நிலவரப்படி லாபம் ஈட்டியுள்ளன. வங்கிகளின் வாராக் கடன்கள் அளவும் குறைந்துள்ளது. பல்வேறு துறைகளுக்குக் கடன் வழங்கும் நடவடிக்கைகளை வங்கிகள் தொடா்ந்து வருகின்றன என்றாா் தேபாசிஷ் பாண்டா.

முழு கட்டுரையைப் படிக்க →