விவசாயிகளின் சந்தேகங்களைத் தீர்க்க தயாராக உள்ளோம்: மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குா்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் சந்தேகங்களைத் தீர்க்க அரசு தயாராக உள்ளதாக மத்திய நிதித் துறை இணையமைச்சா் அனுராக் சிங் தாக்குா் தெரிவித்துள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் சந்தேகங்களைத் தீர்க்க அரசு தயாராக உள்ளதாக மத்திய நிதித் துறை இணையமைச்சா் அனுராக் சிங் தாக்குா் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த 3 புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் தில்லியை முற்றுகையிட்டு தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடும் குளிருக்கு மத்தியில் பலருக்கு உடல்நிலை மோசமடைந்த நிலையிலும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகளின் போராட்டம் இன்று 30ஆவது நாளை எட்டியுள்ளது.
விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு ஐந்துகட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. இருப்பினும், போராட்டத்துக்கு இன்னும் தீா்வு எட்டப்படவில்லை. இதனிடையே 3 சட்டங்களையும் முழுமையாக திரும்பப்பெற்ற பின்னரே, அரசுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் என்று கூறி விவசாயிகள் போராட்டத்தைத் தொடா்ந்து நடத்தி வருகின்றனா்.
இந்தநிலையில், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட மத்திய அரசு விவசாயிகளுக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளது. இதற்கு முன்பு கடந்த 20-ஆம் தேதி பேச்சுவார்த்தைக்காக மத்திய அரசு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு உறுதியான திட்டத்தோடு முன்வந்தால் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்கங்கள் கடந்த 23-ஆம் தேதி அறிவித்தன.
இதுகுறித்து மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குா் கூறுகையில், பல விவசாயிகள் புதிய விவசாய சட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளனர். 2022 க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம்.
போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் சந்தேகங்களை தீர்க்கவும் அரசு தயாராக உள்ளது. பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே ஒரு தீர்வைக் காண முடியும் என்றார்.