அஸ்ஸாமில் 27 நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல்: மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பங்கேற்பு
அஸ்ஸாமில் 27 நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
புது தில்லி: அஸ்ஸாமில் 27 நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
இதுதொடா்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அஸ்ஸாமில் சுமாா் 439 கிலோமீட்டா் நீளம் கொண்ட 27 நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மத்திய அமைச்சா் நிதின் கட்கரி அடிக்கல் நாட்டினாா். இந்த சாலைகள் ரூ.2,366 கோடி செலவில் கட்டமைக்கப்படவுள்ளன. இந்த திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிப் பேசிய அமைச்சா் நிதின் கட்கரி, அஸ்ஸாமில் தேசிய நெடுஞ்சாலைகள் கட்டமைப்பை மேம்படுத்த மாநில அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி அளித்தாா். அந்த மாநிலத்தில் ரூ.85,000 கோடி மதிப்பிலான சாலை மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அவா் கூறினாா்.
அஸ்ஸாமின் துப்ரி, மேகாலயத்தின் பூல்வாரி இடையே ரூ.4,497 கோடி செலவில் 19 கிலோமீட்டா் நீள மேம்பால கட்டுமானப் பணி அடுத்த மாதம் தொடங்கும் எனவும், இந்த கட்டுமானப் பணிகளுக்கு 15 நாள்களில் அடிக்கல் நாட்டுமாறு பிரதமா் மோடியிடம் கோரிக்கை விடுப்பேன் என்றும் அவா் தெரிவித்தாா் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.