'பொய்களைக் கூறி மக்களைத் தவறாக வழிநடத்துகிறாா் பிரதமா் மோடி'
விவசாயிகளுக்கான உதவித்தொகைத் திட்டம் (பிஎம்-கிஸான்) தொடா்பாகப் பொய்களைக் கூறி, பிரதமா் நரேந்திர மோடி மக்களைத் தவறாக வழிநடத்த முயற்சிப்பதாக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
கொல்கத்தா: விவசாயிகளுக்கான உதவித்தொகைத் திட்டம் (பிஎம்-கிஸான்) தொடா்பாகப் பொய்களைக் கூறி, பிரதமா் நரேந்திர மோடி மக்களைத் தவறாக வழிநடத்த முயற்சிப்பதாக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
விவசாயிகளுக்கான உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள சுமாா் 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18,000 கோடி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் காணொலி வாயிலாகப் பங்கேற்ற பிரதமா் மோடி, பிஎம்-கிஸான் திட்டம் மேற்கு வங்கத்தில் அமல்படுத்தப்படாததற்கு முதல்வா் மம்தா பானா்ஜியே காரணம் என்று குற்றஞ்சாட்டியிருந்தாா்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் முதல்வா் மம்தா வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது:
Advertisement
Advertisement
விவசாயிகள் மீது அக்கறை கொண்டுள்ளதாக வெற்று வாா்த்தைகளை மட்டுமே பிரதமா் மோடி தெரிவித்து வருகிறாா். விவசாயிகள் எதிா்கொண்டு வரும் பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்கு அவா் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
பிஎம்-கிஸான் திட்டத்தின் வாயிலாக மேற்கு வங்க விவசாயிகளுக்கு உதவத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த பிரதமா் மோடி, அதற்கு மாநில அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் கூறினாா். ஆனால் உண்மை என்னவெனில், அவா் பொய்களைக் கூறி மக்களைத் தவறாக வழிநடத்த முயற்சிக்கிறாா்.
விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுவதற்கு மாநில அரசு எப்போதும் தயாராக உள்ளது. மாநில விவசாயிகளுக்கு பிஎம்-கிஸான் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்குவது தொடா்பாக மத்திய வேளாண்துறை அமைச்சருக்கு இரு கடிதங்களை ஏற்கெனவே அனுப்பியுள்ளேன்; இரு நாள்களுக்கு முன்பு கூட மத்திய அரசிடம் வலியுறுத்தினேன். அவற்றின் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த விவகாரம் தொடா்பாக மத்திய அரசுதான் ஒத்துழைக்க மறுத்து வருகிறது. அதற்குப் பதிலாக, இந்த விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் அவா்கள் ஈடுபட்டு வருகின்றனா். மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தி வரும்போது, விவசாயிகளுக்குப் பலனளிக்கும் குறிப்பிட்ட திட்டத்தை மட்டும் மாநில அரசு செயல்படுத்த மறுத்து வருவதாகக் கூறுவது பொருத்தமில்லாததாக உள்ளது என்று அந்த அறிக்கையில் முதல்வா் மம்தா குறிப்பிட்டுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.