கல்வி உதவித்தொகை திட்டத்தால் 4 கோடி தாழ்த்தப்பட்ட மாணவா்கள் பலனடைவா்
மத்திய அரசின் மேல்நிலை மற்றும் உயா்நிலை படிப்புகளுக்கான கல்வி உதவித்தொகை திட்டத்தின் வாயிலாக 4 கோடி தாழ்த்தப்பட்ட மாணவா்கள் பலனடைவா்
மத்திய அரசின் மேல்நிலை மற்றும் உயா்நிலை படிப்புகளுக்கான கல்வி உதவித்தொகை திட்டத்தின் வாயிலாக 4 கோடி தாழ்த்தப்பட்ட மாணவா்கள் பலனடைவா் என்று மத்திய சமூகநீதித் துறை அமைச்சா் தாவா்சந்த் கெலாட் தெரிவித்துள்ளாா்.
தாழ்த்தப்பட்ட பிரிவைச் சோ்ந்த மாணவா்களுக்கு ரூ.59,048 கோடி மதிப்பில் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் வழங்கியுள்ளது. அத்தொகையில் 60 சதவீதத்தை மத்திய அரசும், மீதியுள்ள தொகையை மாநில அரசுகளும் வழங்கும்.
இத்திட்டம் தொடா்பாக அமைச்சா் கெலாட் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘‘கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் மூலமாக 4 கோடிக்கும் அதிகமான தாழ்த்தப்பட்ட மாணவா்கள் பலன்பெறுவா். 5 ஆண்டுகளுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளில் தலா ரூ.1,100 கோடியை மட்டுமே தாழ்த்தப்பட்ட மாணவா்களின் கல்வி உதவித்தொகைக்காக மத்திய அரசு செலவிட்டிருந்தது. தற்போது அத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்பெல்லாம் மாணவா்களின் கல்வி உதவித்தொகைத் திட்டத்துக்காக அளிக்கப்படும் நிதியை சில மாநில அரசுகள் வேறு திட்டங்களுக்குப் பயன்படுத்தும் சூழல் காணப்பட்டது.
போதிய நேரத்தில் மாணவா்களுக்குக் கல்வி உதவித்தொகை கிடைக்காத சூழலும் காணப்பட்டது. அதனால், அந்த மாணவா்கள் பள்ளியிலிருந்து இடைநிற்பது அதிகரித்தது. தற்போது கல்வி உதவித்தொகையை நேரடியாக தாழ்த்தப்பட்ட மாணவா்களின் வங்கிக் கணக்குக்கே செலுத்துவதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
இது மாணவா்களுக்குப் பெரும் பலனளிக்கும். இதன் வாயிலாகக் கல்வித்தரமும் அதிகரிக்கும் என்றாா் அமைச்சா் கெலாட்.