புது தில்லி: நடைபெற்று முடிந்துள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றால், அது வளர்ச்சித் திட்டங்களின் வெற்றியாக இருக்கும் என்று காங்கிரஸ் எம்.பி ஒருவர் வானளாவப் புகழ்ந்துள்ளார்.
தில்லியில் மொத்தமுள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக சனிக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் அமைதியாக முடிவடைந்தது. 6 மணிக்கு முன்னதாக வாக்குச்சாவடிக்குள் நுழைந்த அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இந்த தேர்தலில் 61.67 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமைத் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தேர்தலுக்கு பிந்திய கருத்துக் கணிப்புகளில் ஆம் ஆத்மி கட்சி பெருவாரியான இடங்களில் வெற்றி பெரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடைபெற்று முடிந்துள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றால், அது வளர்ச்சித் திட்டங்களின் வெற்றியாக இருக்கும் என்று காங்கிரஸ் எம்.பி ஒருவர் வானளாவப் புகழ்ந்துள்ளார்.
காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் எம்.பியுமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு மற்றும் ஆம் ஆத்மி கட்சி குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:
தில்லி பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சிறப்பாகவே செயல்பட்டுள்ளது, மிகப்பெரிய வெற்றி பெறுவோம் என்று நான் ஒருபோதும் கூறமாட்டேன். ஆனால் எங்களின் முழு பலத்தையும் பயன்படுத்தி இந்த தேர்தலில் போட்டியிட்டுள்ளோம். அதற்கு பலன்தருவது போல் தேர்தல் முடிவுகள் வந்தால் எங்களுக்கு மகிழ்ச்சிதான்.
இந்த தேர்தலில் பாஜக முழுக்கவே வகுப்புவாத விஷயங்களை முன்வைத்துதான் பிரச்சாரத்தில் ஈடுபட்டது. ஆனால் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் தனது அரசின் வளர்ச்சித் திட்டங்களை முன்வைத்து பிரச்சாரம் செய்தார். எனவே கேஜ்ரிவால் தேர்தலில் வெற்றி பெற்றால், அது வளர்ச்சி திட்டங்களுக்குக் கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படும்.
இவ்வாறு அவர் பாராட்டியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.