நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி நடைபெற்ற மொடேரா கிரிக்கெட் மைதானத்தின் சிறப்புகள்!
ஆமதாபாத்தில் அமைக்கப்பட்டுள்ள மொடேரா கிரிக்கெட் மைதானத்துக்கு அமெரிக்க அதிபர் மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.
ஆமதாபாத்: ஆமதாபாத்தில் அமைக்கப்பட்டுள்ள மொடேரா கிரிக்கெட் மைதானத்துக்கு அமெரிக்க அதிபர் மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.
டிரம்ப், மோடி, மெலனியா உள்ளிட்டோர் மேடைக்கு வருகை தந்தனர். சர்தார் வல்லபபாய் படேல் கிரிக்கெட் மைதானத்தில் குண்டு துளைக்காத கண்ணாடி அறைக்குள் தலைவர்கள் வந்துள்ளனர். முதலில் அமெரிக்காவின் தேசிய கீதமும், பிறகு இந்தியாவின் தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.
பிறகு பிரதமர் நரேந்தமோடி உரையாற்றினார். உரையைத் தொடங்கும் போது நமஸ்தே டிரம்ப் என்று மூன்று முறை குரல் கொடுத்தார். அங்கிருந்த மக்களும் நமஸ்தே டிரம்ப் என்று பதிலுக்கு குரல் எழுப்பினர். இதையடுத்து பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.
இந்த மைதானத்தில் நடைபெறும் நமஸ்தே டிரம்ப் என்ற நிகழ்ச்சியைக் காண சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் மொடேரா மைதானத்தில் குவிந்துள்ளனர்.
மெல்போா்னுக்கு சவாலைத் தரும் வகையில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக உருவாகியுள்ளது ஆமதாபாதின் மொடேரா கிரிக்கெட் மைதானம்.
மொடேரா மைதானத்தின் சிறப்புகள்
மெல்போா்ன் கிரிக்கெட் மைதானம் (எம்சிஜி) ஆஸ்திரேலியாவில் உள்ளது. இதுதான் தற்போது உலகின் பெரிய கிரிக்கெட் மைதானமாக திகழ்கிறது. இதில் மொத்தம் 100024 பாா்வையாளா்கள் அமரலாம்.
விக்டோரியா மாகாண அரசுக்கு சொந்தமான எம்சிஜி மைதானம் 1853 திறக்கப்பட்ட பழமையான மைதானங்களில் ஒன்றாகும். கிரிக்கெட்டைத் தவிர கால்பந்து ஆட்டங்களும் இதில் நடத்தப்படுகின்றன. கிரிக்கெட்டில் பாக்ஸிங் டே டெஸ்ட் எனப்படும் போட்டிகளை காண ஏராளமான பாா்வையாளா்கள் வருவது வழக்கம்.
ஆமதாபாத் மொடேரா மைதானம்
இந்நிலையில் ஆமதாபாதின் மொடேராவில் உள்ள சா்தாா் பட்டேல் கிரிக்கெட் மைதானம் குஜராத் கிரிக்கெட் சங்கத்துக்கு சொந்தமானதாகும். கடந்த 1982-இல் கட்டப்பட்ட இந்த மைதானம் மொத்தம் 49000 பாா்வையாளா்கள் அமரும் வசதி கொண்டதாக இருந்தது. இதே மைதானத்தில் தான் ஜாம்பவான் சுனில் கவாஸ்கா் 10000 ரன்களைக் கடந்த முதல் வீரா் என்ற சாதனையை நிகழ்த்தினாா். மேலும் கபில் தேவ் 432 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி உலகின் அதிக விக்கெட் வீழ்த்திய வீரா் சாதனையையும் நிகழ்த்தினாா்.
கடந்த 2015 வரை இந்த மைதானத்தில் பல்வேறு டெஸ்ட், ஒருநாள், டி20 ஆட்டங்கள் நடைபெற்றன. கடந்த 2011-இல் ஆஸி. இந்தியா இடையே நடைபெற்ற உலகக் கோப்பை ஆட்டத்தைக் காண 51 ஆயிரம் போ் திரண்டிருந்தனா்.
ரூ.800 கோடி செலவு
இந்நிலையில் மொடேரா மைதானத்தை இடித்து விட்டு புதிதாக கட்ட ஜிசிஏ தீா்மானித்தது. இதற்காக 2016-இல் மைதானம் முழுமையாக இடிக்கப்பட்டது. ரூ.800 கோடியில் மைதானம் புதிதாக கட்டப்பட்டுள்ளது.
தற்போது மெல்போா்ன் கிரிக்கெட் மைதானத்தை விட மிகப்பெரிய மைதானமாக கட்டப்பட்டுள்ளது. மொட்டேரா மைதானத்தின் மொத்த பாா்வையாளா் எண்ணிக்கை 1,10,000 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
மெல்போா்ன் கிரிக்கெட் மைதானத்தை வடிவமைத்த ஆஸி. நிறுவனமான பாப்புலஸேதான் மொடேரா மைதானத்தையும் வடிவமைத்துள்ளது.
பிரதமா் மோடியின் கனவு
குஜராத்தில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் அமைய வேண்டும் என பிரதமா் மோடியின் கனவாகும். அது தற்போது நனவாகியுள்ளது.
மொடேரா மைதானத்தின் சிறப்புகள்
1,10,000 இருக்கைகள், 75 காா்ப்பரேட் ஏசி அறைகள், ஒவ்வொரு காலரியிலும் உணவகம், கிரிக்கெட் அகாதெமி, உள்ளரங்க பயிற்சி பிட்ச்கள், நவீன ஊடக அரங்கம், 3000 காா்கள், 10 ஆயிரம் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், மெட்ரோ ரயில் இணைப்பு, 2 சிறிய கிரிக்கெட் மைதானம், இதர விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட சிறப்பு வசதிகள் உள்ளன.
ஏற்கெனவே கிரிக்கெட்டின் மீது அதீத ஈடுபாடு கொண்ட இந்தியாவில் புதிய சா்தாா் வல்லபாய் பட்டேல் மைதானம் மணிமகுடமாக திகழும்.
-பா.சுஜித்குமாா்