இந்தியாவுக்காக இரவு-பகல் பாராமல் உழைப்பவர் பிரதமர் மோடி: டிரம்ப் புகழாரம்
இந்தியாவுக்காக இரவு-பகல் பாராமல் உழைப்பவர் பிரதமர் மோடி என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.
ஆமதாபாத்: இந்தியாவுக்காக இரவு-பகல் பாராமல் உழைப்பவர் பிரதமர் மோடி என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள மொடேரா மைதானத்தில் லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில், நடைபெற்ற நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். பிறகு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 'நமஸ்தே' என்று கூறி தனது உரையைத் தொடங்கினார்.
பலத்த கைத்தட்டலுக்கு இடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது உரையை ஆற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, எல்லைகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்க ஒவ்வொரு நாட்டுக்கும் உரிமை உண்டு. தெற்காசியாவில் நிலவும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண அமெரிக்கா தயாராக உள்ளது. பயங்கரவாதத்தை ஒடுக்க இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. பாதுகாப்புத் துறையில் இந்தியாவுடன் 3 பில்லியன் டாலர் அளவுக்கு அமெரிக்கா நாளை ஒப்பந்தம் மேற்கொள்ளவிருக்கிறது.
இந்தியாவுடன் சிறந்த வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். பயங்கரவாதிகளை ஒழிக்க பாகிஸ்தானுடன் இணைந்து அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. தனது ஆட்சிக் காலத்தில் இந்திய மக்களை வறுமையில் இருந்து பிரதமர் மோடி வெளியே கொண்டு வந்துள்ளார்.
இந்தியாவுக்காக இரவு பகல் பாராமல் உழைப்பவர் பிரதமர் மோடி. இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நட்பு நாடாக அமெரிக்கா திகழும். பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தின் பெருமை மட்டுமல்ல, கடின உழைப்பு, விடா முயற்சி, பக்திக்கும் உதாரணமாக திகழ்கிறார் என்றும் கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், மகாத்மா காந்தியின் ஆசிரமத்துக்குச் சென்று வந்ததை மிகப் பெருமையாகக் கருதுகிறோம்.
இந்தியா சுவாமி விவேகானந்தர், சச்சின், விராட் கோலி போன்றவர்களையும் உலகுக்குத் தந்துள்ளது. இந்த உலகில் உள்ள மக்கள் பாலிவுட் பாடங்களை பார்த்து மகிழ்ச்சியடைகிறார்கள். ஷோலே, தில்வாலே துல்லேனியா லே ஜாயேங்கே உள்ளிட்டப் படங்களை உலக மக்கள் விரும்பிப் பார்த்தார்கள். சச்சின், விராட் போன்ற வீரர்களால் நீங்கள் உற்சாகம் அடைகிறீர்கள்.
இந்தியர்கள் தாங்கள் விரும்பும் எதையும் அடைந்துவிடுவார்கள். அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மை தற்போது குறைந்துள்ளது. பயங்கரவாதிகளுக்கும் பயங்கரவாதத்துக்கும் எதிராக இந்தியாவுடன் இணைந்து அமரிக்கா செயல்படும். பயங்கரவாதத்தால் இந்தியாவும் அமெரிக்காவும் பாதிக்கப்பட்டுள்ளன. ஐஎஸ்ஐஎஸ் தலைவன் பாக்தாதியை அமெரிக்கப் படைகள் அழித்துவிட்டன.
இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு பலப்படுத்தப்படுவது குறித்து பேச உள்ளேன். பாதுகாப்புக் காரணங்களுக்காக அமெரிக்கா வருவது கடினம். பாகிஸ்தான் எல்லையில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தனிச்சிறப்பு வாய்ந்த ஹெலிகாப்டர்கள் இந்திய ராணுவத்துக்கு விற்க உள்ளோம் என்று கூறினார்.