முன்னாள் காதலி படத்துடன் ஹோலி வாழ்த்து போஸ்டர் ஒட்டிய இளைஞர் கைது!
முன்னாள் காதலிக்கு திருமணம் நடக்கவிருப்பதை அறிந்து பழிவாங்கும் நோக்கத்துடன் அவருடன் இருப்பது போன்று படத்தை உருவாக்கி, ஹோலி வாழ்த்து போஸ்டர்கள் ஒட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
ரே பரேலி: முன்னாள் காதலிக்கு திருமணம் நடக்கவிருப்பதை அறிந்து பழிவாங்கும் நோக்கத்துடன் அவருடன் இருப்பது போன்று படத்தை உருவாக்கி, ஹோலி வாழ்த்து போஸ்டர்கள் ஒட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
உத்தர பிரதேச மாநிலம் ரே பரேலியைச் சேர்ந்தவர் மனோஜ் குமார். இவர் அருகில் உள்ள சலோன் பகுதியைக் சேர்ந்த பெண் ஒருவரைக் காதலித்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கு வழக்கறிஞர் ஒருவருடன் வரும் வாரம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
இந்தத் தகவலையறிந்து கோபம் கொண்ட மனோஜ் குமார் அப்பெண்ணை பழிவாங்கத் திட்டமிட்டார். எனவே அந்தப் பெண்ணும் தானும் ஒன்றாக இருப்பது போன்ற படங்களை மார்பிங் செய்து உருவாக்கினார். பின்னர் அந்தப் படங்களுடன் ஹோலி வாழ்த்து போஸ்டர்களை தயாரித்து அந்தப் பெண் வசிக்கும் சலோன் பகுதியில் ஓட்டினார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண்ணின் தந்தை உடனடியாக காவல்துறையில் புகார் செய்தார். இதையடுத்து பல்வேறு பிரிவுகளின் கீழ் மனோஜ் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் பிரதாப்கர் என்னும் பகுதிக்கு அருகில் உள்ள கிராமம் ஒன்றில் மறைந்திருந்த அவரை 'ஆன்ட்டி ரோமியோ' பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.