பாதுகாப்புத் துறையில் ரூ.21 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம்: அதிபர் டொனால்ட் டிரம்ப்
இந்தியா - அமெரிக்கா இடையே பாதுகாப்புத் துறையில் ரூ.21 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
புது தில்லி: இந்தியா - அமெரிக்கா இடையே பாதுகாப்புத் துறையில் ரூ.21 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று மாலை புது தில்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, இந்தியா மிகப்பெரிய சந்தையைக் கொண்டுள்ள நாடாகும். இந்திய தொழில் அதிபர்கள் அமெரிக்காவில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளனர்.
பிரதமர் மோடியுடனான சந்திப்பு சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது. இந்தியாவில் இருந்த தருணங்கள் சிறப்பு வாய்ந்தவை. தெற்கு ஆசியாவின் அமைதி குறித்தும் மோடியுடன் பேசினேன். தலிபான்களுடன் விரைவில் உடன்பாடு எட்டப்படும் என்று நம்புகிறேன்.
பயங்கரவாதத்தை ஒடுக்க மற்றவர்களை விட அதிகமாக செயலாற்றி உள்ளேன். கரோனா வைரஸினால் இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. இந்தியாவுடன் எரிசக்தித் துறையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என்று டிரம்ப் கூறினார்.
ஆப்கானிஸ்தானில் வாழும் 99% மக்களும் அமைதியையே விரும்புகிறார்கள். ஈரானைச் சேர்ந்த சுலைமானியை அமெரிக்கப் படைகள் சமீபத்தில் சுட்டுக் கொன்றது. உலகில் பல பகுதிகளில் அமைதியை ஏற்படுத்தவே அமரிக்கர்கள் பணியாற்றி வருகிறார்கள். பயங்கரவாதத்தை ஒழித்து, உலகம் முழுக்க அமைதியை நிலைநாட்டுவதே இலக்கு. பாதுகாப்பு ஆயுத தளவாடங்களை கொள்முதல் செய்வதில் இந்தியா அதிகம் ஆர்வம் காட்டுகிறது.