இந்தியா

மக்களைத் தவறாக வழிநடத்தும் மோடி - அமித் ஷா: சோனியா காந்தி

DIN


குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ) விஷயத்தில் பிரதமரும், உள்துறை அமைச்சரும் நாட்டைத் தவறாக வழிநடத்துகின்றனர் என காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவி வரும் சூழல் குறித்து ஆலோசனை நடத்த எதிர்க்கட்சிகளுக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. இந்தக் கூட்டம் தில்லியில் இன்று (திங்கள்கிழமை) நடைபெற்றது. அப்போது பேசிய சோனியா காந்தி,

"பிரதமரும் உள்துறை அமைச்சரும் மக்களைத் தவறாக வழிநடத்துகின்றனர்.

அரசியலமைப்புச் சட்டம் வலுவிழக்கச் செய்யப்பட்டுள்ளது. அரசு இயந்திரங்கள் தவறாகப் பயன்படுத்துகின்றன.

குறிப்பாக மாணவர்களும் இளைஞர்களும் குறிவைக்கப்பட்டுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் பெருமளவிலான மக்கள் துன்புறுத்தப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

ஜாமியா மில்லியா பல்கலைக்கழகம், பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம், அலகாபாத் பல்கலைக்கழகம், அலிகார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் தாக்குதல்கள் அரங்கேறிய உடனே தில்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் பாஜகவால் திட்டமிடப்பட்டு தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. இவற்றை நாடு உற்று கவனித்து வருகிறது.

மோடி - ஷா அரசின் நிர்வாகத் திறமையின்மையும், மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கத் தவறியதும் தற்போது வெளிப்பட்டுவிட்டது. அஸ்ஸாமில் அமல்படுத்தப்பட்ட என்ஆர்சி, திட்டமிட்டதற்கு நேர் எதிராக அமைந்துவிட்டதுபோல் தெரிகிறது.

மோடி - ஷா அரசு தற்போது என்பிஆர்-ஐ நடைமுறைப்படுத்துவதில் கவனம் செலுத்தியுள்ளது. உள்துறை அமைச்சர் உறுதியளித்ததற்கு முரணாக, நாடு முழுவதிலுமான தேசிய குடிமக்கள் பதிவேட்டில்தான் இது முடிவடையும் என்பது தெளிவாகிவிட்டது.

இந்தியா எதிர்கொண்டுள்ள முக்கியப் பிரச்னையே பொருளாதார மந்தநிலை. அனைத்துப் பிரிவினரும் குறிப்பாக ஏழை மற்றும் பின்தங்கிய பிரிவினர் மத்தியில் இது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் இதற்குப் பதில் இல்லை. அதனால்தான், ஒன்றன்பின் ஒன்றாக நாட்டைப் பிளவுபடுத்தும் விவகாரங்கள் மூலம் மக்களைத் திசை திருப்புகின்றனர். எனவே, நாம் ஒன்றிணைந்து அரசின் இத்திட்டத்தை உடைத்தெறிய வேண்டும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT