உ.பி.யில் அமைச்சர் வசிக்கும் தெருவில் இருக்கும் வீடுகளுக்கு காவி வண்ணம்: வழக்குப் பதிவு
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் அமைச்சர் வசிக்கும் தெருவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் வலுக்கட்டாயமாக காவி வண்ணம் அடிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரயாக்ராஜ்: உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் அமைச்சர் வசிக்கும் தெருவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் வலுக்கட்டாயமாக காவி வண்ணம் அடிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநில அமைச்சர் நந்த் கோபால் நந்தி வீடு அமைந்திருக்கும் தெருவில் இருக்கும் அனைத்து வீடுகளுக்கும் காவி நிற வண்ணம் பூசப்பட்டது குறித்து அப்பகுதியில் வசிக்கும் தொழிலதிபர் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அமைச்சரின் ஆட்கள் வந்து, தங்கள் வீட்டுக்கு வலுக்கட்டாயமாக காவி நிற வண்ணம் அடித்துவிட்டுச் சென்றிருப்பதாக அதே தெருவில் வசிக்கும் மற்றொரு நபரும் வழக்குப் பதிவு செய்துள்ளார்.
ஆனால், இது மேம்பாட்டுப் பணிகளில் ஒன்றுதான் என்றும், இதனை சர்ச்சையாக்குவது தேவையற்றது என்றும் அமைச்சர் நந்த கோபால் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியாகும் புகைப்படங்களில், ஒரு தெருவில் இருக்கும் அனைத்து வீடுகளுக்கும் காவி நிறம் அடிக்கப்பட்டிருப்பதும், சில வீடுகளில் மதம் தொடர்பான குறியீடுகள் வரையப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.
இது குறித்து சமூக வலைத்தளங்களிலும் புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகிறது. அதில், வண்ணம் அடிக்க வந்தவர்களை அந்த வீட்டின் உரிமையாளர்கள் தடுத்தும், அவர்களது எதிர்ப்பை மீறி வண்ணம் அடிக்கப்பட்டிருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.