பாஜகவில் இணையப்போவதில்லையெனில், பைலட் ஜெய்ப்பூர் திரும்ப வேண்டும்: ரண்தீப் சுர்ஜேவாலா
சச்சின் பைலட் பாஜகவில் இணையப்போவதில்லையெனில் உடனடியாக ஜெய்ப்பூரிலுள்ள அவரது வீட்டுக்குத் திரும்ப வேண்டும் என காங்கிரஸ் தலைவரும், செய்தித் தொடர்பாளருமான ரண்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.
சச்சின் பைலட் பாஜகவில் இணையப்போவதில்லையெனில் உடனடியாக ஜெய்ப்பூரிலுள்ள அவரது வீட்டுக்குத் திரும்ப வேண்டும் என காங்கிரஸ் தலைவரும், செய்தித் தொடர்பாளருமான ரண்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.
இதுபற்றி ரண்தீப் சுர்ஜேவாலா இன்று (புதன்கிழமை) தெரிவித்ததாவது:
"ராஜஸ்தான் அரசைக் கவிழ்க்கும் பாஜகவின் சதித் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. பாஜகவில் இணையப்போவதில்லை என்ற சச்சின் பைலட்டின் கருத்தைப் பார்த்தோம். அப்படியென்றால் ஹரியாணா பாஜக அரசின் பாதுகாப்பு வட்டத்திலிருந்து உடனடியாக வெளியே வர வேண்டும். பாஜகவுடனான அனைத்துப் பேச்சுவார்த்தைகளையும் நிறுத்திவிட்டு, ஜெய்ப்பூரிலுள்ள உங்கள் வீட்டுக்கு வர வேண்டும்." என்றார்.
முன்னதாக, ராஜஸ்தான் துணை முதல்வர் மற்றும் காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவிகளிலிருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் பாஜகவில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகின. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டும், "சச்சின் பைலட் கையில் எதுவுமில்லை, அனைத்தும் பாஜக ஏற்பாடு" என்றார்.
இந்த நிலையில், தான் பாஜகவில் இணையப்போவதில்லை என சச்சின் பைலட் இன்று காலை தெரிவித்தார்.