முகப்பு
இந்தியா

பொதுமக்களுக்கு வால்வு பொருத்தப்பட்ட என்95 முகக்கவசம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்

வால்வுகள் பொருத்தப்பட்ட என்95 முகக்கவசத்தை பொதுமக்கள் அணிவதைத் தடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறையின் சுகாதார சேவை பொது இயக்குநர் அறிவுறுத்தல் கடிதம் அனுப்பியுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:58 PM
வால்வு பொருத்தப்பட்ட என்95 முகக்கவசம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்
பகிர்:


வால்வுகள் பொருத்தப்பட்ட என்95 முகக்கவசத்தை பொதுமக்கள் அணிவதைத் தடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறையின் சுகாதார சேவை பொது இயக்குநர் அறிவுறுத்தல் கடிதம் அனுப்பியுள்ளார்.

காற்று வெளியே வந்து செல்ல வசதியாக முகக்கவசத்தில் அமைக்கப்படும் வால்வுகள் பிரத்யேகமாக மருத்துவத் துறையினருக்காக தயாரிக்கப்படுவை என்றும், அந்த முகக்கவசங்களை பொதுமக்கள் தவறான முறைகளில் பயன்படுத்துவதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வால்வுகள் பொருத்தப்பட்ட என்95 முகக்கவசங்கள், கரோனா தொற்றில் இருந்து காக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வால்வு மூலம் வெளிக் காற்றில் இருக்கும் மிகச் சிறிய திவளையில் இருக்கும் கரோனா தொற்று கூட வடிகட்டுப்படும். இது மூக்கு மற்றும் வாய்ப் பகுதியின் அருகே மூடப்படும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இது பிரத்யேகமாக சுகாதாரத் துறையினருக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சில வகைகளும் உள்ளன.

அதாவது, சில என்95 முகக்கவசங்களில் இருக்கும் வால்வுகள் ஒரு வழி திறப்புப் பாதை கொண்டதாக இருக்கும். அதாவது உள்ளே இருந்து காற்று எளிதாக வெளியேறும் வகையில் இருக்கும். அது வடிகட்டப்படாது. அவ்வாறு வடிவமைக்கப்பட்ட என்95 முகக்கவசங்களை அணியும் போது, வெளியில் இருந்து அந்த முகக்கவசத்தை அணிபவருக்கு வேண்டுமானால் கரோனா பரவாது. ஆனால், அணிந்திருப்பவருக்கு கரோனா இருந்தால், அது அவரது வால்வு கொண்ட முகக்கவசத்தின் மூலம் வெளியே சென்று அருகில் இருப்பவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.

முகக்கவசம் என்பது, கரோனா தொற்று பிறரிடம் இருந்து முகக்கவசம் அணிந்திருப்பவருக்கும், முகக்கவசம் அணிந்திருப்பவரிடம் இருந்து பிறரையும் பாதுகாக்கும் கவசமாக செயல்படுகிறது.  ஆனால் ஒரு வழி திறப்பு வால்வுகள் கொண்ட என்95 முகக்கவசங்கள் அவ்வாறு செயல்படுவதில்லை.

அதே சமயம், இரு வழிப் பாதை கொண்ட என்95 முகக்கவசங்கள், உள்ளே இருந்து காற்று சுத்திகரிக்கப்பட்டு வெளியேயும், வெளியே இருக்கும் காற்று சுத்திகரிக்கப்பட்டு உள்ளேயும் அனுப்பப்படுகிறது. இதுதான் மருத்துவத் துறையில் பணியாற்றுவோருக்கு வழங்கப்படுகிறது. மருத்துவத் துறையில் உள்ளவர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம் என்பதால் இது கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த வேறுபாட்டை அறியாமல், பொதுமக்கள் ஒருவழித் திறப்பு கொண்ட என்95 முகக்கவசங்களை அணியும் போது ஆபத்தை ஏற்பதும்.

எனவே, பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரும் போது சாதாரண துணியால் செய்த முகக்கவசத்தை அணிவதே சிறந்தது என்றும், அந்த முகக்கவசம் மூக்கு மற்றும் வாய்ப் பகுதிக்கு அருகே மூடப்பட்டிருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், முகக்கவசத்தை ஒவ்வொரு நாளும் சோப்புப் போட்டு துவைத்து சுத்தம் செய்து காய வைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், மாஸ்க்குகளை சோப்புப் போட்டு துவைக்கலாம், அல்லது ஐந்து நிமிடம் கொதிக்கும் தண்ணீரில் போட்டு எடுக்கலாம், அந்த தண்ணீரில் உப்புப் போட்டு கொதிக்க வைப்பது இன்னும் சிறந்தது என்றும் யோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →