'சாமானிய மக்கள் எப்படி பாதுகாப்பாக உணர முடியும்?' - உ.பி.யில் பத்திரிகையாளர் தாக்குதல் குறித்து பிரியங்கா கேள்வி
காசியாபாத்தில் பத்திரிகையாளர் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவத்துக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
காசியாபாத்தில் பத்திரிகையாளர் மீதான தாக்குதலுக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் அருகே பத்திரிகையாளர் ஒருவரை மர்ம நபர்கள் தாக்கியத்துடன் துப்பாக்கியால் சுட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காசியாபாத்தில் பணிபுரியும் பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி என்பவர் தனது இரு மகள்களுடன் விஜய் நகர் அருகே வந்துகொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் சிலர் வழிமறித்து அவரைத் தாக்கினர். பின்னர் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
இதுதொடர்பாக காவல்துறையினர் இன்று ஐந்து பேரை கைது செய்துள்ளனர். மொத்தமாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காசியாபாத் மூத்த போலீஸ் சூப்பிரண்டு கலாநிதி நைதானி தெரிவித்துள்ளார். துப்பாக்கியால் சுடப்பட்ட பத்திரிகையாளர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இச்சம்பவத்துக்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
'காசியாபாத்தில் பத்திரிகையாளர் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவத்தை வைத்து ஒட்டுமொத்தமாக மாநிலத்தின் நிலைமையை தெரிந்துகொள்ள முடியும். தனது மருமகளை கிண்டல் செய்த நபர்கள் மீது பத்திரிகையாளர் போலீசில் புகார் கொடுத்ததால் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சாமானிய மக்கள் எப்படி தங்களை பாதுகாப்பாக உணர முடியும்?' என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.