தில்லியில் கொட்டித் தீர்த்த மழை; மேலும் இரண்டு நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை
தில்லியில் கடந்த இரண்டு நாள்களாக கனமழை கொட்டித் தீர்த்து வந்த நிலையில், அடுத்த 48 மணி நேரத்துக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
புது தில்லி: தில்லியில் கடந்த இரண்டு நாள்களாக கனமழை கொட்டித் தீர்த்து வந்த நிலையில், அடுத்த 48 மணி நேரத்துக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தில்லியின் ஒரு சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், பெரும்பாலான பகுதிகளில் மிதமானது முதல் லேசான மழை பரவலாக பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி, இமாச்சல், உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியாணா, சண்டிகர், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பரவலாக அடுத்த இரண்டு நாள்களுக்கு கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
48 மணி நேரத்துக்குப் பிறகு மழையின் தீவிரம் மெல்ல குறையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த இரண்டு நாள்களாக தில்லியில் பெய்து வரும் கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில், அடுத்த 48 மணி நேரத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது தில்லி வாழ் மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தில்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழை காரணமாக 4 பேர் மரணம் அடைந்தனர்.