தில்லியில் கரோனா பாதிப்பு குறித்து ஆகஸ்ட் 1 - 5 வரை மீண்டும் ஆய்வு
தில்லியில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து அறிய, வரும் ஆகஸ்ட் 1 - 5-ம் தேதி மீண்டும் புதிதாக ஆய்வு நடத்தப்படும் என்று தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.
புது தில்லி: தில்லியில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து அறிய, வரும் ஆகஸ்ட் 1 - 5-ம் தேதி மீண்டும் புதிதாக ஆய்வு நடத்தப்படும் என்று தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.
தில்லியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாதந்தோறும் இந்த ஆய்வை (செரோ ஆய்வு) நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே இந்த ஆய்வை தில்லி அரசு, தேசிய நோய் தடுப்பு மையம் ஆகியவை இணைந்து மேற்கொண்டன. கடந்த ஜூன் 27-ஆம் தேதி முதல், ஜூலை 10-ஆம் தேதி வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவில்: தில்லியில் உள்ள 11 மாவட்டங்களில், மொத்தம் 21,387 பேருக்கு தொற்று மாதிரிகள் பெறப்பட்டு அதில், ஆன்டி பாடி எந்த அளவிற்கு இருக்கின்றன என பரிசோதிக்கப்பட்டது. இதன்படி, தில்லியில் 23.48 சதவீதம் பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால், இவா்களில் பெரும்பாலானவா்களுக்கு கரோனா அறிகுறிகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அடுத்த மாதம் நடைபெறும் ஆய்வில், இதைவிட அதிக மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனை செய்யப்படும் என்று அமைச்சர் கூறினார்.
இதைத் தவிர, பிளாஸ்மாவை விற்கவோ, வாங்கவோ முயல்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் எச்சரித்துள்ளார்.