அசோக் கெலாட் சகோதரர் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை
உர ஊழல் வழக்கில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் சகோதரர் அக்ராசெய்ன் கெலாட் இல்லம் உள்பட 12 இடங்களில் அமலாக்கத் துறையினர் இன்று (புதன்கிழமை) சோதனை நடத்தினர்.
உர ஊழல் வழக்கில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் சகோதரர் அக்ராசெய்ன் கெலாட் இல்லம் உள்பட 12 இடங்களில் அமலாக்கத் துறையினர் இன்று (புதன்கிழமை) சோதனை நடத்தினர்.
உர உழல் வழக்கில் சுங்கத் துறை அளித்த புகாரின்பேரில் அமலாக்கத் துறை பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதன் அடிப்படையில், இன்று சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதுபற்றி அமலாக்கத் துறை மூத்த அலுவலர் ஒருவர் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்ததாவது:
"குஜராத்தில் 4, ராஜஸ்தானில் 6, மேற்கு வங்கத்தில் 2 மற்றும் தில்லியில் 1 இடம் என நாடு முழுவதும் 13 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்துகிறது. அக்ராசெய்ன் கெலாட்டுக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தப்படுகிறது. அவருடைய நிறுவனமான அனுபம் கிருஷிதான் இந்தியன் பொட்டாஷ் லிமிடட் (ஐபிஎல்) நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்பாக உள்ளது." என்றார்.
இந்த வழக்கு குறித்து அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
"அக்ராசெய்ன் கெலாட்டுக்குச் சொந்தமான நிறுவனம்தான் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள எம்ஓபி உரத்தை ஏற்றுமதி செய்வதில் ஈடுபட்டுள்ளது. ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள இந்த எம்ஓபி உரத்தை ஐபிஎல் நிறுவனம் இறக்குமதி செய்து, அதை விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகம் செய்கிறது. இந்த வழக்கில் அக்ராசெய்ன் கெலாட்டுக்கு சுங்கத் துறை ரூ. 7 கோடி அபராதம் விதித்துள்ளது.
2007 முதல் 2009 வரை அக்ராசெய்ன் கெலாட்தான் ஐபிஎல் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலர். அவரது நிறுவனம் எம்ஓபி உரத்தை மானிய விலைக்கு வாங்கி, அதை விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்குப் பதிலாக மற்ற நிறுவனங்களுக்கு விற்பனை செய்திருக்கிறார். அந்த நிறுவனங்கள், அதை மலேசியா மற்றும் சிங்கப்பூருக்கு சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்துள்ளன." என்றனர்.
ராஜஸ்தானில் அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையே மோதல் போக்கு நிலவி வரும் இந்தச் சூழலில் அமலாக்கத் துறையினர் இந்த சோதனையை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.