பனாஜி: அந்த 33 கரோனா மரணங்களுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்று கோவா மாநில சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஸ்வஜித் ராணே உருக்கமாகத் தெரிவித்தார்.
கோவா மாநில சட்டப்பேரவையின் சிறப்பு ஓர் நாள் பருவ கால கூட்டத்தொடர் திங்களன்று நடைபெற்றது. மாநிலத்தின் கரோனா நிலைமையை அரசு சரியாகக் கையாளவில்லை என்று கூறி எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்துவிட்ட சூழலில், சட்டப்பேரவையில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஸ்வஜித் ராணே பேசியதாவது:
நமது மாநிலத்தில் கரோனா காரணமாக நிகழ்ந்திருக்கின்ற மரணங்களுக்காக மன்னிப்புத் தெரிவித்துக் கொள்கிறோம். அதிலும் குறிப்பாக சனிக்கிழமையன்று 14 வயது சிறுமி ஒருத்தி இறந்திருப்பது என்னை மிகவும் மோசமாக பாதித்துள்ளது.
மாநிலத்தின் மக்கள் தொகை 15 லட்சம். அதில் 1.21 லட்சம் பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 8.11 சதவீதமாகும். இதுவரை இங்கு பதிவு செய்யப்பட்ட 4.686 பாதிப்பு எண்ணிக்கையில், 3,047 பேர் குணமாகி சென்றுள்ளார்கள். எனவே நமது குணமடைதல் வீதம் 65% ஆகவும்., இறப்பு வீதம் 0.75% ஆகவும் உள்ளது. இது தேசிய அளவிலான சராசரியை விடக் குறைவாகும்.
மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் தேசத்தில் மற்றும் உலகில் என்ன நடக்கிறதோ அதிலிருந்து கோவா மட்டும் தன்னை தற்காத்து விலகியிருக்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.