21 நாள்கள் அவகாசம் வழங்கி பேரவையைக் கூட்டலாம்: ராஜஸ்தான் அரசுக்கு ஆளுநர் நிபந்தனை
21 நாள்கள் அவகாசம் வழங்கி சட்டப்பேரவையைக் கூட்ட ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா இன்று (திங்கள்கிழமை) ஒப்புக்கொண்டார்.
21 நாள்கள் அவகாசம் வழங்கி சட்டப்பேரவையைக் கூட்ட ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா இன்று (திங்கள்கிழமை) ஒப்புக்கொண்டார்.
ராஜஸ்தான் துணை முதல்வராகவும், மாநிலத் தலைவராகவும் இருந்த சச்சின் பைலட், முதல்வர் அசோக் கெலாட் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதன் காரணமாக பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க அசோக் கெலாட் விரும்புகிறார்.
இதையடுத்து, பேரவையைக் கூட்டுவதற்கான அமைச்சரவைத் தீர்மானம் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. எனினும், பேரவையைக் கூட்டுவது தொடர்பாக 6 கேள்விகளை உள்ளடக்கிய கடிதத்தை முதல்வர் அசோக் கெலாட்டிடம் வழங்கினார் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா.
இதைத் தொடர்ந்து, மீண்டும் அமைச்சரவைக் கூட்டம் நடத்தி வரும் 31-ம் தேதி பேரவையைக் கூட்டுவதற்கான திருத்தப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கடந்த சனிக்கிழமை ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இந்த நிலையில், பேரவையைக் கூட்டுவதற்கு ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா 3 பரிந்துரைகள் அடங்கிய நிபந்தனைகளை விதித்துள்ளார்.
பேரவையைக் கூட்ட 21 நாள்கள் அவகாசம் அளித்து நோட்டீஸ் கொடுக்க வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றால், அதை மாநில அரசு நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும். கடைசியாக, கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவல் காரணமாக பேரவைக் கூட்டம் நடத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவின் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் சட்டப்பேரவையைக் கூட்ட ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில், 21 நாள்கள் நோட்டீஸ் அளித்து பேரவையைக் கூட்டலாம் என ஆளுநர் நிபந்தனை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.