புது தில்லி: வேலையே இல்லை என்றாலும் எக்காரணத்தைக் கொண்டும் திரும்பச் செல்லமாட்டோம் என்று சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் புலம்பெயர் தொழிலாளி ஒருவர் கூறியுள்ளார்.
ராஜ்குமாரி, உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா பகுதியைச் சேர்ந்தவர், புது தில்லி ரயில் நிலையத்தில், தனது உடைமைகள் அனைத்தையும் சுமந்து கொண்டு வந்திறங்கினார். அங்கிருந்து வாராணசி செல்லும் ரயிலுக்கு டிக்கெட் எடுக்க அவர் காத்துக் கொண்டிருக்கிறார்.
ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், இங்கே எங்களுக்கு எந்த வேலையும் இல்லை. வருவாய் இல்லாததால் வாடகை செலுத்தக் கூட முடியவில்லை. எக்காரணத்தைக் கொண்டும் நாங்கள் மீண்டும் தில்லிக்கு வர மாட்டோம். அதனால் தான் எங்களுடைய உடைமைகளை எடுத்துக் கொண்டு கிளம்புகிறோம் என்கிறார்.
தில்லியில் தினக் கூலியாக இருந்த தனது கணவருக்கு தற்போது எந்த வேலையும் இல்லாததால் சொந்த ஊருக்குச் செல்வதாகவும், அங்கேச் சென்று விவசாயம் செய்து வேளாண் உற்பத்தியில் ஈடுபடப் போவதாகவும் கூறுகிறார்.
ராஜ்குமாரியைப் போலவே, வேலையிழந்து, கையில் காசில்லாமல் போக்குவரத்து வசதிக்காக அங்கும் இங்கும் கடும் வெயிலில் அலைந்து கொண்டிருக்கும் அனைத்து புலம்பெயர் தொழிலாளர்களும், ஒரே குரலில் உரத்துச் சொல்வது ஒன்றைத்தான், குறைந்தது ஒன்று முதல் இரண்டு ஆண்டுகளுக்கு இந்த கசப்பான அனுபவம் எங்களால் மறக்க முடியாது, வேலையே இல்லாவிட்டாலும் திரும்ப இங்கு வர மாட்டோம் என்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.