குஜராத்தில் மூன்றாவது காங்கிரஸ் எம்எல்ஏ ராஜிநாமா
குஜராத்தில் வரும் 19-ஆம் தேதி மாநிலங்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள சூழலில், காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் இருவா் நேற்று ராஜிநாமா செய்த நிலையில், இன்று பிரிஜேஷ் மெர்ஜாவும் தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
குஜராத்தில் வரும் 19-ஆம் தேதி மாநிலங்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள சூழலில், காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் இருவா் நேற்று ராஜிநாமா செய்த நிலையில், இன்று பிரிஜேஷ் மெர்ஜா என்ற எம்எல்ஏவும் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
மோர்பி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏ பிரிஜேஷ் மெர்ஜாவின் ராஜிநாமா ஏற்கப்பட்டதாக சட்டப்பேரவை செயலாளர் உறுதி செய்துள்ளார்.
குஜராத்துக்கு மாநிலங்களவையில் காலியாக உள்ள 4 இடங்களுக்கான தோ்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதில் பாஜக சாா்பில் போட்டியிட மூவரும் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட இருவரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.
மாநில சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 103 எம்எல்ஏ-க்களும் காங்கிரஸுக்கு 68 எம்எல்ஏ-க்களும் உள்ளனா். அதன்படி மாநிலங்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு இரு இடங்களும் காங்கிரஸுக்கு ஒரு இடமும் உறுதியாகியுள்ளது. எனினும், நான்காவது இடத்தைக் கைப்பற்றுவதில் இரு கட்சிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில், கா்ஜன் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ அக்சய் படேல், கப்ராதா தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஜிது சௌதரி ஆகியோா் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்தனா்.
காங்கிரஸ் குற்றச்சாட்டு: இந்த விவகாரம் தொடா்பாக பாஜகவை காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. மாநில சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் பரேஷ் தனானி கூறுகையில், ‘‘மாநிலங்களவைத் தோ்தலில் காங்கிரஸின் வெற்றியைத் தடுக்கும் செயல்களில் பாஜக ஈடுபட்டு வருகிறது. ஊழல் செய்து ஈட்டிய பணத்தைக் கொண்டு காங்கிரஸ் எம்எல்ஏ-க்களை பாஜக விலைக்கு வாங்கி வருகிறது. ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி தோ்தலில் வெற்றி பெற பாஜக முயற்சித்து வருகிறது’’ என்றாா்.
பாஜக மறுப்பு: காங்கிரஸின் குற்றச்சாட்டு தொடா்பாக பதிலளித்த பாஜக வேட்பாளா் நா்ஹரி அமீன், ‘‘காங்கிரஸ் கட்சியின் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே அவா்கள் கட்சியை விட்டு விலகி வருகின்றனா். வரும் காலங்களில் மேலும் சில காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா செய்வாா்கள் என நினைக்கிறேன்’’ என்றாா்.
மாநில சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை தற்போது 65-ஆகக் குறைந்துள்ளது. கடந்த மாா்ச் மாதம் முதல் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் 8 போ் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டனா். அதன் காரணமாக மாநிலங்களவைத் தோ்தலில் வெற்றி பெறுவதில் காங்கிரஸுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.